Close
நவம்பர் 24, 2024 5:18 காலை

ராஜபாளையம் கொசுப்புழு தொழிலாளர்கள் தேர்தல் புறக்கணிப்பு

ராஜபாளையத்தில் பணியாற்றும் கொசுப்புழு ஒழிப்பு தொழிலாளர்களுக்கு 5 வருடங்களாக ஊதிய உயர்வு வழங்காததை கண்டித்து வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் கடந்த 2013ம் வருடம் பரவிய டெங்கு காய்ச்சல் மூலம் 20க்கும் மேற்பட்ட சிறு குழந்தைகள் பலியாகினர். இதனை தொடர்ந்து, 42 வார்டுகளிலும் கொசுப்புழு ஒழிப்புக்காக ஒப்பந்த முறையில் பெண் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். தற்போது, 150க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு 144 ரூபாய் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு ரூபாய் 208 வழங்கப்பட்டது. அதற்கு பிறகு இது வரை ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. கொசுப் புழு ஒழிப்பு பணிகளுடன், குப்பை தரம் பிரித்தல், நகராட்சி வரி வசூல், தேர்தல் பணிகள் என பல்வேறு பணிகள் வழங்கப்படுகிறது.
மேலும், கட்சி நிகழ்ச்சிக்காக சீருடை அணிந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு அழைத்து செல்லப்படுவதாகவும், சில நேரங்களில் இரவு வரை தங்களை அரசியல் கட்சியினர் அலைக்கழிப்பதாகவும் பெண்கள் வேதனை தெரிவித்தனர்.

இதற்கு தனியாக ஊதியம் வழங்கப்படுவதில்லை எனவும், பெண்கள் ஆதங்கம் தெரிவித்தனர். இது குறித்து கேட்டால், திறமையற்ற ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க முடியாது என அதிகாரிகள் கூறுவதாகவும் தெரிவித்தனர். மேலும், சில இடங்களில் தனியாக சென்று பணியாற்றும் நிலையிலும், இது வரை அடையாள அட்டை, சீருடை, பாதுகாப்பு உபகரணங்கள் என எந்த சலுகைகளும் இவர்களுக்கு வழங்கப்படவில்லை.
இதனைக் கண்டித்து, கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபடும் 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பத்தினர் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாகவும், எந்த கட்சிக்கும் வாக்களிப்பதில்லை எனவும் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top