Close
செப்டம்பர் 19, 2024 10:45 மணி

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு ரேஷன் சேலை! பக்தர்கள் அதிர்ச்சி

பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக விளங்குகிறது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில். சிவபெருமான் அக்னி வடிவில் எழுந்தருளிய தலமாகவும், உமையாளுக்கு உடலில் பாதி இடம் கொடுத்து அம்மையப்பனாக காட்சித்தரும் தலமாகவும் திகழ்கிறது.
உலக பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாக கருதக் கூடியதுமான அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரையாக திருவண்ணாமலை நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில் கோயிலில் உள்ள உண்ணாமுலையம்மன் சன்னதியின் முன்பு உள்ள அம்மன் சிலைக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் விலையில்லா சேலை அணிவிக்கப்பட்டிருந்ததாம். இதனைக் கண்ட பக்தர் ஒருவர் அதிர்ச்சியடைந்து, சிலையை படமெடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதுகுறித்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.
இது பற்றிய தகவல் அருணாச்சலேஸ்வரர் கோயில் ஊழியர்களுக்கு தெரிய வந்ததும் உடனடியாக அந்த சேலை மாற்றப்பட்டுவிட்டது.
இந்நிகழ்வு குறித்து அருணாச்சலேஸ்வரர் கோயில் இணை ஆணையர் கூறுகையில், திருவூடல் நிகழ்ச்சியில் மண்டக படியின்போது பக்தர்கள் சிலர் அம்மனுக்கு சேலையை சாத்தினர். இதில் பக்தர் ஒருவர் ரேஷன் சேலையை வழங்கி உள்ளார். அதனை உண்ணாமலை அம்மன் சன்னதி முன்பு உள்ள அம்மன் சிலைக்கு அந்த ரேஷன் கடை விலையில்லா சேலை அணிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி அறிந்ததும் உடனடியாக சேலை மாற்றப்பட்டது, என இந்நிகழ்வு குறித்து திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் இணை ஆணையர் விளக்கம் அளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top