Close
நவம்பர் 21, 2024 2:00 மணி

உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் திருவண்ணாமலையில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்கள் குறித்து ஆட்சியர் ஆய்வு

ஆய்வு செய்வதற்காக வந்த அதிகாரிகள் குழுவினரிடம் பெண்கள் காலில் விழுந்து மனு கொடுத்தனர்.

திருவண்ணாமலை மலை மீது உள்ள சட்டவிரோதமான கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் குழு ஒன்றை அமைத்தது. அந்த குழு திருவண்ணாமலையில் ஆய்வை நடத்தியது, அப்போது ஏராளமான பெண்கள், பொதுமக்கள் நகர மன்ற உறுப்பினர்கள் வரிசையில் நின்று மனு அளித்தனர்.
வெளி மாநிலங்கள் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு புனித பயணமாக வருகின்றனர். அதிலும் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினமன்று கிட்டத்தட்ட 10 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கிரிவலம் வருகின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தங்குவதற்காக ஏராளமான விடுதிகள் திருவண்ணாமலையில் அதிலும் குறிப்பாக கிரிவலப் பாதையில் புதிது புதிதாக கட்டப்பட துவங்கியுள்ளது. அதிலும் அருணாச்சலேஸ்வரர் மலையின் ஒட்டி புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
சட்ட விரோதமாக கிரிவலப் பாதையின் இருபுறமும் கட்டப்பட்டுள்ள, கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை அகற்றக்கோரி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுத்து, எந்த அனுமதியுமின்றி கட்டப்பட்டுள்ள இந்த கட்டடங்களுக்கு குடிநீர் இணைப்பு, மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர் எம்.சி.சுவாமி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து மலையில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்களை நேரில் ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
அதன்படி வழக்கறிஞர் எம்.சி.சுவாமி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் வருவாய் துறை வனத்துறையினர் திருவண்ணாமலை பச்சையம்மன் கோயில் பகுதியில் இருந்து தனது ஆய்வினை தொடங்கினர். தொடர்ந்து மலைமீது சிறிது தூரம் ஏறி ஆக்கிரமிப்பு பகுதிகளையும் பார்வையிட்டனர்.
மலையடிவாரத்தில் உள்ள ஒவ்வொரு தெருவாக சென்று மலையில் கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் கட்டுமானங்கள் குறித்து பார்வையிட்டனர். தொடர்ந்து செங்கம் சாலையில் அக்னி லிங்கம் அருகே பாண்டவர் தீர்த்த குலம் உள்ள பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள், குளங்கள் ஆக்கிரமிப்பு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்போது மலையடிவாரத்தில் பல வருடங்களாக வீடு கட்டி வசித்து வரும் அப்பகுதி மக்கள் தங்களின் வீடுகளை அகற்ற கூடாது என்றும், தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
நகர மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், ஸ்ரீதேவி பழனி, நரேஷ், கோவிந்தன் ஆகியோரது தலைமையிலும் பொதுமக்கள் வந்து மனுக்களை அளித்தனர்.
ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளதாக வந்த தகவலை அடுத்து ஏராளமான பெண்கள் திரண்டு வழக்கறிஞர் சுவாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியனிடம் வரிசையில் நின்று மனு அளித்தனர். சில பெண்கள் அவர்களது காலில் விழுந்து நீதான் சாமி வழி காட்டணும் என கோரிக்கை வைத்தனர்.
இப்பகுதியில் நாங்கள் 50 ஆண்டு காலமாக வசித்து வருகிறோம். கூலி வேலை செய்து வரும் எங்களுக்கு இந்த வீட்டைத் தவிர வேறு இடமில்லை. எனவே எங்களது வாழ்வாதாரத்திற்கு வழி செய்ய கேட்டுக் கொள்கிறோம் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர். .
மேலும் தங்களது ரேஷன் ஆதார் கார்டு, வரி ரசீது, குடிநீர் வரி ரசீது, வாக்காளர் அடையாள அட்டை, மின் கட்டண இணைப்பு அட்டை கேஸ் இணைப்பு ஆகியவற்றையும் இணைத்து பல ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருவதற்கான ஆதாரங்களையும் அந்த மனுவில் சேர்த்து வழங்கினர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனர் சுதர்சன், நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, வட்டாட்சியர்கள், வருவாய்த்துறை மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top