தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வங்கியாளர்களுடன் வளர்ச்சித் திட்டப் பணிகளில் வங்கியாளர்களின் பங்களிப்பு குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில் மாநிலங்களவை உறுப்பினர் .எஸ்.கல்யாணசுந்தரம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ச.முரசொலி (தஞ்சாவூர்), நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி.ஆர்.சுதா (மயிலாடுதுறை) ஆகியோர் முன்னிலையில் (29.08.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிகழ் நிதி ஆண்டில் வங்கிகள் வழங்கும் முன்னுரிமை கடன் இலக்கு குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் விவசாய கடன்களுக்கு 18013 கோடி இலக்காகவும், குறு சிறு தொழில்களுக்கு 3214 கோடி இலக்காகவும், மேற்படிப்பிற்கு 43 கோடியும், வீட்டு வசதிக்காக 195 கோடி, சமூக கட்டமைப்பிற்கு 15 கோடி, இதர முன்னுரிமை கடன்களுக்கு 190 கோடி ஆக மொத்தம் 21,670 கோடி கடன் இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. இதில் வங்கிகளின் பங்களிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், மேற்படிப்பிற்காக மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு சார்ந்த திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஏற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளு மாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் முன்னோடி வங்கி மேலாளர் பிரதீப் கண்ணன், மத்திய ரிசர்வ் வங்கியின் முன்னோடி மாவட்ட அதிகாரி விவேகானந் நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலர் அனீஸ் குமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் உதவி பொது மேலாளர் கோடீஸ்வர ராவ், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர் மணிவண்ணன், தாட்கோ மாவட்ட மேலாளர்.ரங்கராஜன், மகளிர் திட்டம் திட்ட அலுவலர்சாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.