Close
நவம்பர் 21, 2024 9:47 மணி

ஆவினுக்கு செல்லும் பாலில் தண்ணீர் கலப்படம்..! அதிகாரி கையும் களவுமாக கண்டுபிடிப்பு..!

பாலில் தண்ணீரை கலந்ததை கண்டுபிடித்த அதிகாரி பால் கேன்களை பறிமுதல் செய்தார்.

உசிலம்பட்டி அருகே, ஆவினுக்கு செல்லும் பால் கேன்களில் தண்ணீர் கலந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலில் தண்ணீர் கலந்து கொண்டிருந்த போது அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கண்டுபிடித்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கொப்பம்பட்டி கிராமத்தில், உள்ள ஆவின் பால் உற்பத்தி நிலையத்திலிருந்து, தினசரி மதுரை ஆவினுக்கு 30-க்கும் மேற்பட்ட கேன்களில் பால் கொண்டு செல்லப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக இந்த மையத்திலிருந்து ஆவினுக்கு கொண்டு வரப்படும் பால் தரமற்ற நிலையில் உள்ளதாக புகார் எழுந்த சூழலில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.

 

பாலில் தண்ணீரை கலந்து கேன்களை மூடும் வாகன ஓட்டுநர்.

இந்த ஆய்வில் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் பாலை மதுரை ஆவினுக்கு வாகனத்தில் கொண்டு செல்லும்போது கொண்டு செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்தி தண்ணீர் கலப்பதை கண்டறிந்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் வாகன ஓட்டுநரிடமிருந்து, தண்ணீர் மற்றும் தண்ணீர் கலந்த பாலையும் பறிமுதல் செய்தனர்.

இந்த பாலில் தண்ணீர் கலந்த வீடியோ மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாக தற்போது வைரலாகி வருகிறது.

ஆவின் பால் அரசின் பால். அதில் கலப்படம் இருக்காது என்று பொதுமக்கள் நம்பி வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர். பெரும்பாலானவர்கள் தங்கள் வீட்டுத் தேவைகளுக்கும் ஆவின் பாலே நம்பி வாங்குகின்றனர்.

ஆனால் இப்படி ஆவின் பெயரை கெடுப்பதற்கு சில புல்லுருவிகள் சமூக அக்கறை இல்லாமல் பாலில் தண்ணீரை கலப்பது தாயை கொல்வதற்கு சமமாகும். அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பால் எடுக்கும் அவர்களது உரிமையை ரத்து செய்யவேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top