மதுரை சின்ன சொக்கிகுளம் பகுதியில் உள்ள பிரபல தங்கும் விடுதி (ஜெசி ரெசிடென்சி), காளவாசல் பகுதியில் உள்ள (ஜெர்மானஸ்) தங்கும் விடுதி, பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள (மதுரை ரெசிடென்சி) பெருங்குடி மண்டேலா நகர் பகுதியில் உள்ள அமிக்கா ஆகிய நான்கு தங்கு விடுதிகளுக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக தெரிகிறது.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட தங்கும் விடுதியில் இருந்த பணியாளர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை செய்தனர்.
சோதனை முடிவில் அது வதந்தி என்று தெரியவந்தது. மேலும் இரண்டு தினங்களுக்கு முன்பு தான் நான்கு பள்ளிகளில் இதே போன்று இமெயிலில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்தது. அப்போதைய சோதனையிலும் அது புரளி என்பது தெரிந்தது.
பள்ளிகளுக்கு அடுத்து தங்கும் விடுதிகளுக்கு இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தால் மதுரை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் முன் எழும் கேள்விகள்
இதற்கு முன் இமெயில் மூலமாக பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டார்களா..?
இப்போது தங்கும் விடுதிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ளவர்கள் யார்? இந்த சம்பவங்கள் புரளி என்று நாம் கண்டுகொள்ளாமல் இருந்துவிட முடியாது. காவல்துறையினர் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு இதைப்போன்ற செயல்களை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.