Close
நவம்பர் 1, 2024 11:35 மணி

சாம்சங் நிறுவனத்தை கண்டித்து விழுப்புரத்தில் தவிச, விதொச ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் சாம்சங் நிறுவனத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீபெரும்பத்தூர் அருகில் சுங்குவார்சத்திரத்தில் செயல்பட்டுவரும் சாம்சங் நிறுவனத்தில், 1,750 ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர். இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் செப்டம்பர் 9-ம் தேதி 14 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தைத் துவங்கினர். இந்தப் போராட்டம் நாளடைவில் தீவிரம் அடைந்துவருகிறது.
இந்நிலையில் ஒரு மாதமாக போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று இரவு போராட்டத்திற்காகப் போட்டிருந்த பந்தல் உள்ளிட்டவற்றை அகற்றி, போராட்டத்தில் ஈடுபட்டுவந்த 10 ஊழியர்களை நள்ளிரவில் கைது செய்து, ஸ்ரீபெரும்பதூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களைச் சொந்த ஜாமீனில் மாஜிஸ்திரேட் விடுவித்தார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் புதன்கிழமை தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் சாம்சங் நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர்கள் ஆர்.தாண்டவராயன், வி.அர்ஜுனன் ஆகியோர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஆர்டி. முருகன், கே.சுந்தரமூர்த்தி, மாவட்ட பொருளாளர் பி.சிவராமன்,மணிகண்டன், ஐ.சேகர், பழனி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு 30 நாட்களாக சங்கம் அமைக்க அனுமதி கேட்டு சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர், இவர்களுக்கு உடனடியாக சங்கம் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தி பேசினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top