நாடு முழுவதும் புதியதாக பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் என்ற வகைப்பாட்டில் தமிழக வெற்றிக்கழகம் பெயரும் இடம்பெற்றுள்ளது.
நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரத்தில் அக். 27ம் தேதி நடக்க உள்ளது. பிரமாண்டமான வகையில் நடத்த திட்டமிட்டு உள்ள இந்த மாநாட்டின் இறுதிக்கட்ட பணிகள் கட் அவுட்டுகள், மேடை அலங்காரம், வாகன நிறுத்தம், தொண்டர்களுக்கான அடிப்படை வசதிகள் என மாநாட்டு பணிகள் கிட்டத்தட்ட 90 சதவீதம் முடிந்துவிட்டன.
மாநாடு மகிழ்ச்சியில் தமிழகம் முழுவதும் உள்ள தொண்டர்கள் விழுப்புரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்க, அவர்களுக்கு மேலும் தெம்பூட்டும் வகையில் தலைமை தேர்தல் ஆணையம் சர்ப்ரைஸ் ஒன்றை தந்துள்ளது. அதாவது, லோக்சபா தேர்தலுக்கு பின்னர் புதியதாக பதிவு செய்யப்பட்டு கட்சிகளின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.
இந்த பட்டியல் மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக தமிழக வெற்றிக்கழகத்தின் பெயரும் அதிகாரப்பூர்வமாக இடம்பெற்று உள்ளது. பட்டியலில் மொத்தம் 39 கட்சிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. அதில் 26வது பெயராக தமிழக வெற்றிக்கழகம் பிளாட் நம்பர் 275, சீஷோர் டவுன், 8வது அவின்யூ, பனையூர், கிழக்கு கடற்கரை சாலை, சென்னை 600119 என்ற முகவரியுடன் குறிப்பிடப்பட்டு உள்ளது. த.வெ.க., தவிர தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பில் தமிழகத்தில் இருந்து மேலும் 2 கட்சிகளும் புதியதாக பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் இடம்பிடித்து உள்ளன.
நடிகர் விஜய் தமது கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்ட தருணத்தில், தமிழக வெற்றிக்கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய கடந்த பிப்ரவரி 2ம் தேதி தலைமை தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. அதை பரிசீலித்த தேர்தல் ஆணையம், தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்தது.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக த.வெ.க., உருவெடுத்ததை தொண்டர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். அரசியல்களம் தயாராகிவிட்டதாக அவர்கள் உற்சாகம் அடைந்தனர். தற்போது கட்சியின் முதல் மாநாட்டில் பிசியாக இருக்கும் கட்சி முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பால் இரட்டிப்பு குஷியில் வலம் வர ஆரம்பித்துள்ளனர்.