என்னடா..? இப்படி ஆயிட்ட? நல்ல குண்டா இருந்தியேடா..? டேய்.. நீ சீனு இல்ல..? நீ ஒல்லியா இருந்தியேடா..? இப்படியான குரல்கள் கேட்டு ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு பேசிக்கொண்டனர். ஒரு விபத்தில் கையில் அடிபட்ட நண்பரும் தவறாமல் இந்த சந்திப்பில் கலந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சரி சரி வாங்க.. நாம் விஷயத்துக்கு வருவோம்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள 15 பி மேட்டுப்பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி உள்ளது . அந்த பள்ளிகூடத்தில 2002-2003ம் ஆண்டு பிளஸ் டூ படித்த மாணவர்கள் இப்போது அரசு மற்றும் தனியார் துறை, அரசியல் என பல்வேறு பணிகளில் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 2002 -2003ம் ஆண்டு வரை அதாவது பிளஸ் டூ வரை ஒன்றாகப் படித்த மாணவர்கள் சந்திப்பு நேற்று பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. 21 ஆண்டுகளுக்குப் பின்பு நடந்த இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள், இந்த பள்ளியில் பயின்ற போது நடந்த சுவாரசிய சம்பவங்களை குறித்து பகிர்ந்து கொண்டனர்.
சண்டைகள், பின்னர் ஏற்பட்ட சமாதானங்கள், காதல் என ஒளிவு மறைவின்றி நண்பர்கள் மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டனர். சிலர் இப்போது அரசியலில், காவல்துறையில், பொறியியல் துறையில், ஆசிரியர், என பல்வேறு தொழில்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த சந்திப்பின்போது முன்னாள் மாணவர்கள் தங்களது கல்வி, வாழ்க்கை,தற்போது தங்களது குழந்தைகளின் படிப்பு உள்ளிட்டவற்றை மனம் விட்டு பேசி மகிழ்ந்தனர். அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தினர். அவர்கள் உட்கார்ந்திருந்த வகுப்புகளுக்குச் சென்று அமர்ந்து பழைய நினைவுகளை பரிமாறிக்கொண்டனர்.
பின்னர் தாங்கள் படித்த பள்ளிக்குத் தேவையான உபகரணங்களை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.