புதுப்பிக்கப்பட்ட அருணாசலேஸ்வரர் பெரிய தோ் வெள்ளோட்டம் காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தோ் வெள்ளோட்டம் தொடங்கியது. அருணாச்சலேஸ்வரர் பெரிய தேருக்கு சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷத்துடன் வெள்ளோட்டமானது துவங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் பஞ்ச ரதங்களிலும் மராமத்துப் பணிகள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு பெரிய தோ் எனப்படும் அருணாசலேஸ்வரா் தேருக்கு ரூ.70 லட்சத்தில் மராமத்துப் பணிகள் நடைபெற்று தற்போது நிறைவடைந்து இன்று காலை வெள்ளோட்டமானது தொடங்கியது.
59 அடி உயரம் கொண்ட அருணாசலேஸ்வரா் தோ் சுமாா் 200 டன் எடை கொண்டது. தேரில் தேவாசனம், நராசனம், சிம்மாசனம் போன்ற அலங்கார தூண்களில் உள்ள பழுதடைந்தவைகள் மாற்றப்பட்டு உள்ளன.
4 கொடுங்கை நிலைகளும் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. தேரில் கண்டத்தில் வரும் பழுதடைந்த குத்துக்கால்கள் நீக்கப்பட்டு, புதிதாக குத்துக்கால்கள் மற்றும் ரீப்பா்கள் மாற்றப்பட்டு உள்ளன.
தேரில் அமைக்கப்பட்டு உள்ள பிரம்மா மற்றும் துவாரபாலகா், சிம்மயாழி, கொடியாழி, சிலைகள் புதுப்பிக்கப்பட்டு உள்ளன. புதிதாக 203 சிற்பங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
கோயில் ராஜகோபுரம் எதிரிலிருந்து தொடங்கிய தேர் வெள்ளோட்டமானது மாட வீதிகளான தேரடி வீதி, கடலைக் கடை சந்திப்பு, திருவூடல் தெரு, பே கோபுரத் தெரு, பெரிய தெரு, காந்தி சிலை வழியாக மறுபடியும் வந்தடைகிறது.
தேர் வெள்ளோட்டத்தையொட்டி, ஏராளமான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் கம்பன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், கோவில் இணை ஆணையர் ஜோதி ,அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் அறங்காவலர்கள் கோமதி குணசேகரன், டிவிஎஸ் ராஜாராம், மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் , அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.