அன்னாபிஷேக விழாவையொட்டி வியாழக்கிழமை 3 மணி நேரம் தரிசனத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான, புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றாக உள்ளது. நினைத்தாலே முக்தியை தரக் கூடிய முக்தித் தலம் என்பதாலும், சிவனே மலையாக அமர்ந்திருப்பதாக கருதப்படுவதால் மலையை வலம் வந்து வணங்கினால் பாவங்கள் நீங்கி, அனைத்து விதமான செல்வ வளங்களும் கிடைக்கும் என்பதாலும் தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு செல்கின்றனர்.
மாதந்தோறும் வரும் பெளர்ணமியில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை கிரிவலம் வரும் நிலையில், அக்டோபர் மாதம் வரும் ஐப்பசி பெளர்ணமி தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். அனைத்து ஜீவராசிகளுக்கும் அன்னம் வழங்கும் சிவபெருமானுக்கு, ஆண்டுதோறும் ஐப்பசி பெளா்ணமியன்று அன்னாபிஷேகம் அனைத்து சிவன் கோவில்களிலும் நடத்தப்படுவது வழக்கம். ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்தன்று சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான அன்னாபிஷேகம் வியாழக்கிழமை (நவம்பா் 14) நடைபெறவுள்ளது
வெண்ணெய் கலந்த அன்னத்தால் அண்ணாமலையாருக்கு அபிஷேகம் நடத்தப்படவுள்ளது.
அண்ணாமலையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெறும் சமயத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதாவது வியாழக்கிழமை (நவம்பா் 14) பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையிலான மூன்று மணி நேரம் பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அன்று கிரிவலம் செல்ல முடியுமே தவிர, மாலை 6 மணிக்கு பிறகே அண்ணாமலையாரை தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் வழக்கம் போல் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதே போல் சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனமும் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே, குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்கள் தரிசனத்துக்காக வரிசையில் காத்திருப்பதை தவிர்க்குமாறு கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.