Close
நவம்பர் 14, 2024 5:16 மணி

ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை கிள்ளுக்கீரையாக அலட்சியப்படுத்துகிறார் முதல்வர்: பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத் தலைவர் மாயவன்

காளையார்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசும் தமிழ்நாடு உயர் நிலை மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிறுவனத்தலைவர் அ. மாயவன்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் தமிழ்நாடு உயர் நிலை, மேல் நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதில் கலந்து கொண்ட அந்த அமைப்பின் நிறுவன தலைவர் மாயவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எதிர்கட்சி தலைவராக இருந்த போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணம் பெறுவது, உயர்கல்வி தகுதி உள்ளவர்களுக்கு சிறப்பு ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்தார்.
ஆட்சிக்கு வந்து முதலமைச்சரான மு.க. ஸ்டாலின், 43 மாதங்களாகியும் இதுவரை ஒரு சிறு கோரிக்கைகளைக்கூட நிறைவேற்றாமல் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை கிள்ளுக்கீரையாக நினைத்து அலட்சியம் செய்து வருகிறார்.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை கண்டுகொள்ளாத முதல்வருக்கு இந்த பொதுக்குழு கடும் கண்டனம் தெரிவிக்கிறது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம், காத்திருப்பு போராட்டம், உண்ணாவிரதம் என பல்வேறு போராட்டங்களை கையில் எடுப்போம்.
நிதிசார்ந்த கோரிக்கைகளை தவிர்த்து நிதிசாராத கோரிக்கைகளை நிறைவேற்றலாம் என்று தெரிவித்துள்ளதற்கு இப்பொதுக்குழு கண்டனம் தெரிவிக்கிறது.
அனைத்துவிதமாக கோரிக்கைகளையும் முதலமைச்சர் நிறைவேற்ற வேண்டும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நம்புவதாகவும் அப்படி கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் தமிழக முழுவதும் தோழமைச்சங்கங்களுடன் இணைந்து மாபெரும் போராட்டத்தை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கையில் எடுப்போம் என்றார்
இந்த கூட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top