திருவண்ணாமலையில் மாநில இளையோர் பெண்கள் கபடி போட்டிக்கான நிறைவு விழா நடைபெற்றது.
இதில் முதலிடம் பிடித்த ஈரோடு அணிக்கு தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கோப்பையை வழங்கினார்.
தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் ஆகியவை இணைந்து 50வது மாநில இளையோர் பெண்கள் கபடி போட்டி திருவண்ணாமலை மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் நடத்தியது.
இந்த போட்டி 3 நாட்கள் நடைபெற்றது. இதில் 38 மாவட்டங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மாவட்ட அளவிலான 38 அணிகள் கலந்து கொண்டன. இதன் நிறைவு விழா திருவண்ணாமலை மாவட்ட உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னாள் நகர மன்ற தலைவரும் ,ஹேண்ட்பால் சங்க மாநில துணை தலைவர் ஸ்ரீதரன், கபடி கழகத்தின் சேர்மன் பாண்டியன், பொதுச் செயலாளர் சபியுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமெச்சூர் கபடி கழக தலைவர் வெங்கடாஜலபதி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி இறுதிப்போட்டியில் பங்கேற்ற சென்னை- ஈரோடு அணி போட்டியை தொடங்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து கபடி போட்டியில் 40 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து வெற்றிபெற்ற ஈரோடு அணிக்கு ரூ.20 ஆயிரம் ரொக்க பரிசும், கோப்பையையும், 39 புள்ளிகள் பெற்று 2ம் இடம் பிடித்த சென்னை அணிக்கு ரூ.15 ஆயிரம் ரொக்க பரிசும், 3ம் இடம் பிடித்த திருவாரூர் மற்றும் திருப்பூர் அணிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசும், கோப்பையும் பாராட்டு சான்றிதழ்களும் மற்றும் பதக்கங்களை வழங்கி துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பாராட்டினார்.
இந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமபிரதீபன் தமிழ்நாடு விளையாட்டுதுறை மண்டல மேலாளர் நோயலின்ஜான், மாவட்ட விளையாட்டு அலுவலர் சண்முகபிரியா, கபடி கழகத்தின் மாவட்ட பொருளாளர் சண்முகம் ரெட்கிராஸ் சங்க மாவட்ட தலைவர் இந்திரராஜன் உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாநில மாவட்ட அமெச்சூர் கபடி கழக நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.