திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் , செய்யார் கூடுதல் சார்பு நீதிமன்றம் திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன் வரவேற்றார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் நீதிமன்றங்களை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து வழக்கு விசாரணையை தொடங்கி வைத்தார் . மேலும் அவர் செய்யார் கூடுதல் சார்பு நீதிமன்றத்தை காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து விழாவில் தலைமை நீதிபதி பேசுகையில்,
மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது ஸ்ரீராம் பூர் என்ற இடத்தில் முதல் முறையாக நீதிமன்றத்தை திறந்து வைத்தேன். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற பிறகு திருவண்ணாமலை மாவட்டத்தில் நீதிமன்றங்களை திறந்து வைக்கிறேன்.
இரண்டும் புனிதமான இடமாகும் . திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டம் மற்றும் நீதியை எளிமையாக அணுகிடும் வகையில் இந்த இரண்டு நீதிமன்றங்களும் அனைவரது கூட்டு முயற்சியில் திறக்கப்பட்டுள்ளது.
ஊரக மற்றும் நகர்ப்புற மக்கள் நீதி கிடைக்க வெகு தொலைவாக திருவண்ணாமலைக்கு செல்லாமல் இருக்க செய்யாறு மற்றும் கீழ்பெண்ணாத்தூரில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன . நீதித்துறை பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது.
நீதிமன்ற பணிகளில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வெளிப்படை தன்மையுடன் வழக்குகளுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தர வேண்டும்.
புதிய நீதிமன்றங்கள் தேங்கியுள்ள வழக்குகளின் சுமையை குறைக்க உதவும் வழக்குகளை விரைவாக முடிக்க முடியும் அனைவருக்கும் நீதி கிடைக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தலைமை நீதிபதி பேசினார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரதச்சக்கரவர்த்தி பேசுகையில்;
புதிதாகப் பிறந்த நீதிமன்றங்கள் ஒரு நாள் கூட தவறாமல் தன்னுடைய பணியை செய்ய வழக்கறிஞர்கள் ஒத்துழைக்க வேண்டும். புதிய நீதிமன்றங்கள் திறக்கப்படுவது வழக்கா ளிகளுக்கு ஒரு வரப் பிரசாதமாக அமையும் . நீதி விசாரணையின் போது எளிதாக ஆஜராகலாம். நீதிமன்றங்களில் வழக்குகள் நீண்ட நாட்களாக தேங்கி கொண்டிருக்கிறது.
அதைவிட முக்கிய பிரச்சினை நம்மிடம் உள்ளது, அது என்னவென்றால் நீதிமன்றத்திற்கு வரவேண்டிய பல வழக்குகள் நீதிமன்றத்திற்கு வராமல் இருக்கிறது. இதுதான் நம்முடைய தலையாயப் பிரச்சனை. எந்த வழக்கை கடைசிவரை விசாரணை நடத்த வேண்டும்,
எந்த வழக்கை மக்கள் நீதிமன்றத்தில் நடத்த வேண்டும், எந்த வழக்கை சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பி சுமுகமாக முடித்து வைக்க வேண்டும் என்ற சீரிய எண்ணத்துடன் வழக்கறிஞர்கள் செயல்பட வேண்டும். நீதிமன்றத்தில் விசாரணையை கவனமாக நடத்தி மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என பேசினார்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசும்போது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கோரிக்கைக்கு எப்போதும் செவி சாய்க்க வேண்டும். உயர் நீதிமன்ற கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து நிறைவேற்ற வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
செய்யாற்றில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தொடங்க வேண்டும் என வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செய்யாற்றில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தொடங்குவது குறித்து உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்ப நலன் , போக்சோ, பொருளாதார குற்றவியல் சைபர் குற்றம் குற்றவியல் நீதிமன்றங்களின் தேவை அதிகரித்துள்ளது .கூடுதல் நீதிமன்றங்களை திறக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது, கூடுதல் நீதிமன்றங்களை விரைவாக தொடங்குவோம் என பேசினார்.
விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு, தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி ,மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மற்றும் நீதிபதிகள், மாவட்ட அரசு வழக்கறிஞர் புகழேந்தி, மாவட்ட அரசு குற்றவியல் வழக்கறிஞர் மனோகரன், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முதன்மை குற்றவியல் நீதிபதி ஜெயசூர்யா நன்றி கூறினார்.