Close
டிசம்பர் 3, 2024 5:34 மணி

மதுரையில் கான்கிரிட் வாய்க்கால் அமைக்கும் பணி : அமைச்சர் துவக்கி வைத்தார்..!

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி கான்கிரீட் மூடி வாய்க்கால் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

மதுரை :

மதுரை,செல்லூர் கண்மாய் வலது புற கழுங்கிலிருந்து வைகை ஆறு வரை ரூ. 15.10 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் மூடி வாய்க்கால் அமைக்கும் பணிகளை,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.

மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட செல்லூர் கண்மாய் வலது புற கழுங்கிலிருந்து வைகை ஆறு வரை ரூபாய் 1510 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் முடி வாய்க்கால் அமைக்கும் பணிகளை இன்று (11.11.2024) மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்ததாவது:-

மதுரை வடக்கு வட்டத்திற்குட்பட்ட செல்லூர் கண்மாய் மிகவும் பழமையான கண்மாயாகும். இக்கண்மாய் மதுரை மாநகராட்சியின் மையப் பகுதியில் வைகை ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. இக்கண்மாயின் மொத்த பாசனப் பரப்பான 72.73 ஹெக்டெர் நிலம் முழுவதும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக நகர்புறமாக மாறிவிட்டது.

இக்கண்மாயின் மொத்த கொள்ளளவு 16.490 மி.க.அடி. ஆகும். இக்கண்மாயின் இடது கரையில் அமைந்துள்ள கழுங்கின் நீளம் 45.80 மீட்டர் மற்றும் தண்ணீர் வெளியேற்றும் திறன் 2513 க.அடி/விநாடியாகும். இக்கண்மாயின் உபரி நீர் 2600 மீட்டர் நீளம் கொண்ட பந்தல்குடி கால்வாய் மூலம் வைகை ஆற்றினை சென்றடைகிறது.

செல்லூர் கண்மாயின் ஒருங்கிணைந்த நீர்பிடிப்பு பகுதி 29.225 சதுர கி.மீ. ஆகும். மேலும், இக்கண்மாயின் மேல் பகுதியில் அமைந்துள்ள விளாங்குடி கண்மாய், கரிசல்குளம் கண்மாய், சிலையநேரி கண்மாய், ஆனையூர் கண்மாய், முடக்கத்தான் கண்மாய் மற்றும் தத்தனேரி கண்மாய் ஆகிய கண்மாய்களின் ஆயக்கட்டு பகுதிகள் அனைத்தும் குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டபடியால் மேற்படி கண்மாய்களின் உபரி நீரும் கூடுதலாக செல்லூர் கண்மாய்க்கு வந்து சேருகிறது.

எனவே, மழை காலங்களில் செல்லூர் கண்மாய்க்கு அதிகப்படியான தண்ணீர் உள் வரவு வந்து உபரி நீராக வடிவமைக்கப்பட்ட அளவான 2513 க.அ./விநாடியினை விட கூடுதலாக அதாவது 3603 க.அ./விநாடி வெளியேற்றப்பட்டுள்ளது.

இக்கண்மாயின் கழுங்கின் தண்ணீர் வெளியேற்றும் திறன் குறைவாக உள்ள காரணத்தினாலும் மற்றும் குறுகிய கால்வாயில் வெளியேற்றப்பட்டதால் கடந்த நவம்பர் 2005-ஆம் ஆண்டு குடியிருப்பு பகுதிகளான செல்லூர், கட்டபொம்மன் நகர், பி.பி.குளம் மற்றும் நரிமேடு ஆகிய பகுதிகள் வெள்ள நீரால் சூழப்பட்டு குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தேங்கியுள்ள மழை நீரில் மூன்று முதல் நான்கு நாட்கள் வரை சிரமப்பட்டனர். மேலும், அவர்களது உடமைகளுக்கு பாதுகாப்பற்ற நிலையும் ஏற்பட்டது.

எனவே, தற்போதைய வலது புற கரையில் அமைந்துள்ள தலை மதகின் மூலம் 1090 க.அ./விநாடி தண்ணீரினை வெளியேற்றும் வகையில் புதிதாக 290 மீட்டர் நீளத்திற்கு மூடிய கால்வாயாக அமைத்து வைகையாற்றில் சேர்க்கும் வகையில் திட்டமிடப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 30.10.2024-அன்று ஆய்வு செய்து செல்லூர் கண்மாயின் மூடிய கால்வாய் திட்டதிற்கு ரூ.1190.00 இலட்சங்களுக்கு ஒப்புதல் வழங்கினார்கள்.

இத்திட்டத்தின் கீழ், மதுரை மாநகராட்சியின் குடிநீர் பைப் மற்றும் கழிவுநீர் பைப்புகளை இடமாற்றம் செய்வதற்கு ரூ.315.95 இலட்சங்களுக்கு மதிப்பீடு தாயார் செய்யப்பட்டுள்ளதால் ரூ.1190.00 இலட்சங்களுக்கு பதிலாக 1510.00 இலட்சங்களுக்கு மறுமதிப்பீடு செய்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், செல்லூர் கண்மாயில் புதிய ரெகுலேட்டர், தொட்டி மற்றும் 290 மீட்டர் நீளத்திற்கு சுரங்க கால்வாய் கட்டும் பணி ஆகிய பணிகளை, தமிழ்நாடு முதலமைச்சர், ஆணைக்கிணங்க இன்றைய தினம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த் , மாநகராட்சி ஆணையாளர் ச.தினேஷ் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.வெங்கடேசன் (சோழவந்தான்), மு.பூமிநாதன் (மதுரை தெற்கு) , நீர்வளத்துறையின் தலைமைப் பொறியாளர் எஸ்.ரமேஷ், கண்காணிப்பு பொறியாளர் ஜெ.சாம் இர்வின் , செயற்பொறியாளர் அ.வெ.பாரதிதாசன், உதவி செயற்பொறியாளர் பி.எஸ்.சையது ஹபீப் , உதவிப்பொறியாளர் பிரபாகரன் , மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top