அரசு பள்ளிக்கூடத்தில் மாணவர்களை சேர்க்கவேண்டும் என்று தமிழக அரசு தொடப்பள்ளிகளில் இருந்து மேல்நிலைப்பள்ளி வரையிலும் பல்வேறு நவீன வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. பல பெற்றோர்களின் மனதில் மாற்றம் வந்துள்ளது. அவர்களே அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் ஒரு ஆசிரியையின் செயல் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அய்யம்பட்டியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் புனிதா என்பவர் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் 21ம் தேதி வகுப்பறையில் சில மாணவர்கள் பேசிக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது.
இதில் கோபமடைந்த ஆசிரியை புனிதா, வகுப்பில் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படும் ஒரு மாணவி உட்பட 5 மாணவர்களின் வாயிலும் செலோ டேப்பை ஒட்டி பல மணி நேரம் வகுப்பறைக்குள் உட்கார வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
இவ்வாறு மாணவர்கள் வாயில் செலோ டேப் ஒட்டியதை அதே பள்ளியில் பணியாற்றும் மற்றொரு ஆசிரியை அந்த மாணவர்களை அவரது செல்போனில் படம் எடுத்து மாணவர்களின் பெற்றோருக்கு அனுப்பிவிட்டார்.
இதைப்பார்த்த பெற்றோர் சும்மா இருப்பார்களா..? டேப் ஒட்டிய விவகாரம் பூதாகரமானது.
புகைப்படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தலைமை ஆசிரியரிடம், எதற்காக இபப்டி செய்தீர்கள் என்று விளக்கம் கேட்டனர். பேசவேண்டாம் என்று பலமுறை சொல்லியும் அந்த மாணவர்கள் வகுப்பறையில் பேசிக்கொண்டு இருந்தனர். அதனால் செலோ டேப் ஒட்டினேன் என்று தலைமை ஆசிரியர் விளக்கம் அளித்ததாகக் கூறப்படுகிறது.
பெற்றோரிடமே இப்படி பேசும் தலைமை ஆசிரியை பிள்ளைகளிடம் எவ்வளவு மோசமாக நடந்துகொள்வார் என்று கோபமடைந்த பெற்றோர், புகைப்பட ஆதாரத்துடன் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
இதையடுத்து புகாரை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலருக்கு மனுவை அனுப்பி விசாரணை செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மதியழகன் பரிந்துரைப்படி வட்டாரக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி வருகிறார்.
அரசுப் பள்ளிகளில் சிறந்த ஆசிரியர்களும் உள்ளதை நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஒரு ஆசிரியரை அந்த பள்ளியில் இருந்து மாற்றக்கூடாது என்று கண்ணீர்விட்ட மாணவர்களையும் நாம் பார்த்துள்ளோம்.
ஆனால், அப்படியான சிறப்புமிக்க ஆசிரியர்களைக் கண்ட நாம் இப்போது வித்தியாசமாக வகுப்பறையில் பேசிய மாணவர்களின் வாயில் செலோ டேப் ஓட்டிய தலைமை ஆசிரியரை நாம் பார்க்கின்றோம்.
பேசியது ஒரு குத்தமாம்மா..? மாணவர்கள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள். அவர்களை செம்மைப்படுத்துவதே ஒரு ஆசிரியரின் பணி. அதைக்கூட அறியாமல் இருந்தால்,அவர்கள் ஆசிரியராக இருப்பதற்கே தகுதியற்றவர்கள்.
இப்போ இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.