Close
நவம்பர் 14, 2024 5:57 காலை

புதுப்பாளையத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா கிளை: மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிளையை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்த ஆட்சியர்

புதுப்பாளையத்தில் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா கிளையை மாவட்ட ஆட்சியர்  பாஸ்கர பாண்டியன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்து நல திட்ட உதவிகளை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் பகுதியில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் 106வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு புதுப்பிக்கப்பட்ட யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா கிளை திறப்பு விழா நடந்தது.

புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தார். புதுப்பாளையம் பேரூராட்சி தலைவர் செல்வபாரதி மனோஜ்குமார், செயல் அலுவலர் சுகந்தி, வட்டாட்சியர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா, ஒன்றிய கவுன்சிலர் பொன்னி சுந்தரபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .

கிளை மேலாளர் சம்பத் ராஜ்குமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்  பாஸ்கரபாண்டியன் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி யூனியன் பாங்க் ஆப் இந்தியா கிளையை திறந்து வைத்து ரூ.68.10 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவி காசோலைகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதில் சென்னை மண்டல தலைவர் சத்யபன் பெஹரா, காஞ்சிபுரம் பிராந்திய தலைவர் ஜெயராஜ் சபாட்லா, நகர செயலாளர் சீனிவாசன், உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள்,  யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலர்கள்,  பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

 திருவண்ணாமலை அடுத்த புதுப்பாளையம் பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக நடைபெற்று வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுப்பாளையம் பேரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துவர்களிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், மருந்துகளின் இருப்பு நிலை குறித்தும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார். மேலும் நோயாளிகளிடம் நலம் விசாரித்து சத்தான உணவுகளை சாப்பிட அறிவுறுத்தினார்.

புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம், காரப்பட்டு ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பாக கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை தரமானதாகவும் விரைவாகவும் முடிக்க அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில் செங்கம் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மருத்துவர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top