Close
நவம்பர் 14, 2024 4:35 மணி

கட்டளைதாரர்கள் உபயதாரர்களுக்கு தீபத் திருவிழாவில் முக்கியத்துவம்: அமைச்சர் சேகர் பாபு

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் சேகர்பாபு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. மகா தீபத்தைக் காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்வது தொடர்பான அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது..

கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு தீபத் திருவிழாவுக்கு 35 லட்சம் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டன. நிகழாண்டு கூடுதலாக 20 சதவீத பக்தர்களுக்கு என மொத்தம் 42 லட்சம் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு கால கட்டங்களில் கோவிலின் மூன்று கால பூஜை உள்ளிட்ட பல்வேறு விதமான திருப்பணிகளுக்கு கட்டளைதாரர் உபயதாரர்கள் தான் மிக முக்கியமானவர்கள் அவர்களுக்கு தீபத் திருவிழாவில் முக்கியத்துவம் கொடுத்து உரிய வகையில் அடையாள அட்டை வழங்கப்படும்.

திமுக ஆட்சிக்கு வந்த 3 ஆண்டு காலத்தில் கட்டளைதாரர்கள் உபயதாரர்கள் மூலமாக கிட்டத்தட்ட 920 கோடி ரூபாய் கோவில் திருப்பணிகள்  நடைபெற்றுள்ளன. திராவிட மாடல் ஆட்சியின் மீது உள்ள நம்பிக்கையில் இதுபோன்று திருப்பணிகளை செய்து வருகின்றனர். ஆகவே அவர்களுக்கு உரிய மரியாதையும் கௌரவம் அளிக்கப்படும் .

தீபத்திருநாள் அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் தீபம் ஏற்றப்படும் எனவும் தீபம் ஏற்ற முடியாத கோவில்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தீப எண்ணெய் மற்றும் திரி வழங்கப்படும் எனும் தெரிவித்த அவர் தீபத்திருநாள் அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் தீப ஒளியில் மின்னும் என தெரிவித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அண்ணாமலையார் திருக்கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காவலர்கள், அனைத்து துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top