Close
நவம்பர் 14, 2024 5:02 மணி

குவாரியில் அதிக ஆழத்தில் மண் எடுத்ததால் செம்மண் நிறமாக மாறிய நிலத்தடி நீர்: மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள்புகார்

திருவள்ளூர் அருகே கிராம மக்களுக்கு குடிநீர் வழங்கும் கிணறு அருகே அதிக ஆழத்தில் குவாரியில் மண் எடுத்ததால் நிலத்தடி நீரானது செம்மண் நிறமாக நிறம் மாறி உள்ளதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.

திருவள்ளுவர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், கூனிப்பாளையம் கிராமத்தில் சுமார் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன இவர்களுக்கு அதே பகுதியில் குடிநீர் விநியோகம் செய்வதற்காக கிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அதன் அருகே பட்டா இடத்தில் திருவள்ளூர் புவியியல் மற்றும் சுரங்கத் துறை இணை இயக்குனர் அவர்களால் செயல் முறை ஆணை 251/2016/GSM 2 ஆணைப்படி 12/01/2024 முதல் 11/01/2025 வரை சுமார் ஒரு வருட காலத்திற்கு கிராவல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரசு அனுமதித்த அளவைவிட அதிக அளவில் குவாரியில் மண் எடுப்பதால் மழைக்காலங்களில் மழைநீரானது தோண்டப்பட்ட பள்ளத்தில் குட்டை போல் தேங்கி நிற்கிறது.

இது  அருகே உள்ள குடிநீர் வழங்கப்படும் கிணற்றில் ஊற்று ஏற்பட்டு நிலத்தடி நீரில் கலப்பதால் குடிநீரானது செம்மண் நிறமாக நிறம் மாறி உள்ளது.
இந்த தண்ணீரை அப்பகுதிகிராம மக்கள் பயன்படுத்தும்போது உணவு சாதம் நிறம் மாறுவதாகவும்  தண்ணீரை குடிக்கும்போது துர்நாற்றம் வீசுவதாகவும், குளிக்க பயன்படுத்தும் போது உடலில் தோல் சம்பந்தமான பிரச்சனைகளும் ஏற்படுவதாக கூறுகின்றனர்
மேலும் இந்த தண்ணீரை பருகியதால் உடல்நலம் குறைவு ஏற்பட்டு சிறு பிள்ளைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டுகின்றனர்.


எனவே இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தும் குவாரியின் உரிமையாளரை அழைத்து விசாரிக்காமலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமலும் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்,
இந்நிலையில் தற்போது அந்த கிணற்றில் தண்ணீர் நிறம் மாறி நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதிச் சார்ந்த 400 மேற்பட்ட கிராம மக்கள் நிறம், சுவை மாறிய குடிநீரை பாட்டில்களை எடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளும் காண்பித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

மேலும் இது குறித்து மக்கள் அறிக்கையில் தற்போது நாங்கள் அளித்துள்ள மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்துவோம் என தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top