தமிழகத்தில் வரும் ஜனவரி 21ம் தேதி முதல் பனை, தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்யப்படும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கள்ள இயக்கம் மற்றும் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு கள்ள இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை வகித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி, விவசாய நிலங்களில் உள்ள பனை மற்றும் தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்யலாம். கள் ஒரு போதைப்பொருள் அல்ல; அது உணவுப்பொருளின் பட்டியலில் உள்ளது. கடந்த 1987ம் ஆண்டு முதல் தமிழகத்தில் கள்ளில் ரசாயனப் பொருட்கள் கலப்பதால், கள்ளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அண்டை மாநிங்களா கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் கள் இறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கள்ளுக் கடைகளை ஏலம் விட்டு கள் விற்பனை செய்தால்தான் கலப்படம் செய்ய முடியும். விவசாய தோட்டங்களில் கள் இறக்கி நேரடியாக விற்பனை செய்தால் கலப்படம் செய்ய முடியது.
எனவே வருகிற 2025ம் ஆண்டு ஜன. 21ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் விவசாய தோட்டங்களில் உள்ள பனை மற்றும் தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம்.
மரவள்ளிக்கிழங்கு:
இந்தியாவிலேயே அதிக அளவில் நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் மரவள்ளிக்கிழங்கு பயிரிடப்படுகிறது. மரவள்ளிக்கிழங்கில் இருந்து ஜவ்வரிசி உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் சேகோ ஆலைகள் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் அதிகம் உள்ளது.
கடந்த ஆண்டு ஒரு டன் மரவள்ளிக்கிழங்கு ரூ. 12 ஆயிரம் விலையில் விற்பனையானது. இந்த ஆண்டு ஒரு டன் ரூ. 5,500 முதல் ரூ. 6,00 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்படுகிறது.
வட மாநிலங்களில் ஜவ்வரிசியை கஞ்சியாக சமைத்து உணவின் ஒரு பகுதியாக உண்பதால் அங்குதான் ஜவ்வரிசி அதிக அளவில் விற்பனையாகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஜவ்வரிசி வெண்மை நிறம் வேண்டும் என்பதற்காக பல்வேறு வகையான ரசாயாயனப் பொருட்களை ஜவ்வரிசியுடன் கலந்து தயாரித்ததால், வட மாநிலங்களில் அதை சாப்பிட்டவர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்பட்டது. அதனால் அவர்கள் தற்போது ஜவ்வரிசிக்கு பதிலாக சிறுதானியத்தை உணவுக்கு பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
இதனால் ஜவ்வரிசி விற்பனை குறைந்து, விலையும் குறைந்துள்ளது. இதனால் மரவள்ளிக்கிழங்கு விலை பாதியாக குறைந்துவிட்டது. எனவே ஜவ்வரிசி உற்பத்தியின்போது ரசாயணங்கள் கலப்பதை முழுமையாக தடை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சேகோ தொழிலும், மரவள்ளிக்கிழங்கு உற்பத்தியும் முற்றிலும் பாதிக்கப்படும்.
நதி நீர் இணைப்பு:
மேட்டூர் அணை கட்டப்பட்டு 90 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை 44 ஆண்டுகள் அணை நிரம்பி, உபரிநீர் கடலுக்கு சென்று வீனாகியுள்ளது. கர்நாடகா அரசு ஒப்பந்தத்தை கடைபிடிக்காமல் அங்குள்ள அணைகளில் நீர் நிரம்பும் நேரங்களில் மட்டும் உபரி நீரை திறந்துவிடுகிறது. அந்த நீர் அப்படியே மேட்டூர் வந்து, இந்த அணையும் நிரம்பி உபரி வீனாக கடலில் சென்று கலப்பதை தடுக்க முடியவில்லை.
காவிரியின் இருபுறமும் உள்ள குளம், குட்டை மற்றும் ஏரிகள் நீரின்றி கிடப்பதை காணமுடிகிறது. மேட்டூர் அணையில் இருந்து இடதுபுறும் கால்வாய் வெட்டி உபரி நீரை திருமணி முத்தாறு, சரபங்கா, வசிஷ்ட நதி போன்றவற்றில் இணைப்பதன் மூலம் 5 மாவட்டங்கள் போதுமான பாசன வசதி பெறும்.
வலதுபுறும் கால்வாய் வெட்டினால் ஈரேடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் உள்ள நீர்த்தேக்கங்களுக்கு உபரி நீரை கொண்டு செல்ல முடியும்.
ஒவ்வொரு முறையும் அரசியல்வாதிகள் தேர்தலின்போது அறிவிக்கும் இந்த திட்டத்தை, பின்னர் கிடப்பில் போட்டு விடுகின்றனர். தமிழகத்தில் இலவச திட்டங்களுக்கு செலவழிக்கும் பெரும் தொகையை இதுபோன்ற நதி நீர் திட்டங்களுக்கு பயன்படுத்தி விவசாயத்திற்கும், குடிநீர் தேவைக்கும் உதவி செய்ய வேண்டும்.
சிப்காட் தொழிற்பேட்டை:
இந்தியா என்பது ஒரு விவசாயம் சார்ந்த நாடு. தற்போது மத்திய, மாநில அரசுகள், அந்நியக் கம்பெனிகளுக்கு ஆதரவாக விவசாய நிலங்களை கையகப்படுத்தி தொழிற்பேட்டைகள் அமைக்க வழங்குகின்றனர். இதனால் உலக நாடுகளின் குப்பைத்தொட்டியாக இந்தியா மாறி வருகிறது. உணவுப்பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் தொழிற்பேட்டையால் அப்பகுதியில் காற்று, தண்ணீர், சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு, அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் வசிப்பவர்கள் புற்றுநோயால் உயிரிழக்கின்றனர்.
எனவே இதுபோன்ற நிலை உருவாகாமல் இருக்க, நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டாரத்தில், அமைக்க உத்தேசித்துள்ள சிப்காட் தொழிற்பேட்டை திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது தமிழ்நாடு கள் இயக்க மாநில அமைப்பாளர் கதிரேசன், விவசாயிகள் முன்னேற்ற கழக மாநில பொது செயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.