திருவண்ணாமலையில் கட்டப்பட்டு வரும் மக்கள் குறைதீா் கூட்ட அரங்கம், சமுதாயக்கூடம், உணரவைக்கப்படும் ஏரி மேம்பாட்டுப் பணிகள் ஆகியவற்றினை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாநகராட்சிகுட்பட்ட சமுத்திரம் காலணியில் 5,569 சதுர அடியில் ரூ.2 கோடியே 50 லட்சத்தில் நவீன சமுதாயக் கூடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை அமைச்சா் எ.வ.வேலு புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, கழிப்பறை மற்றும் குளியல் அறைகளை சமுதாயக்கூட கட்டடத்துக்கு வெளியே மாற்றுமாறு உத்தரவிட்டாா்.
நவீன சமுதாய கூடம் கட்டடத்தில் தரைதளத்தில் நுழைவு கூடம், வரவேற்பு அறை, அலுவலகம், உணவு கூடம், சமையல் அறை, வைப்பறை, சமையல் எரிவாயு அறை, முதல் தளத்தில் மணமகன் அறை, மணமகள் அறை, திருமண கூடம், மின் தூக்கி ,சமையல் கூட பொருட்கள் வாங்குதல், உணவு அருந்தும் கூடம் மேசை மற்றும் நாற்காலி வாங்குதல், திருமண கூடம் இருக்கைகள் வாங்குதல் உள்ளிட்டவைகள் குறித்து பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார்.
ரூ.12.17 கோடியில் குறைதீா் கூட்ட அரங்கம்…
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் 13073 சதுர அடியில் ரூ.12 கோடியே 17 லட்சத்து 94 ஆயிரத்து 738 மதிப்பில் புதிய மக்கள் குறைதீா் கூட்ட அரங்கம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியை அமைச்சா் எ.வ.வேலு நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் வேலு தெரிவிக்கையில்;
ஆதிதிராவிடா் இன மக்கள் அதிகம் வசிக்கும் கல்நகா், சமுத்திரம் காலனியைச் சோ்ந்த பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று 500 போ் அமரும் வகையில் சமுதாயக் கூடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியா் பொதுமக்கள் பார்த்து மனு கொடுத்து தங்களுடைய தேவைகளை தீர்க்கிற நாள். இந்த நாளில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் மனுக்களை அளிப்பதற்காக காத்திருப்பார்கள். அதே நேரத்தில் இன்றைக்கு மக்கள் தொகை அதிகமாக கொண்டிருக்கிற ஒரு மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் இருக்கிறது.
ஊராட்சிகளை அதிகமாக கொண்டிருக்கிற ஒரு மாவட்டம், விவசாயிகள் அதிகம் இருக்கிற மாவட்டம். ஆகவே திங்கள் கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்திற்கு வருகை தரும் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றும், பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்த்து அவர்களுக்கு முறையாக அலுவலர்கள் மூலமாக தீர்வு வழங்க வேண்டுமென்பதற்காவும் சுமாா் 1,000 போ் பங்கேற்கும் வகையில் புதியதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்வு நாள் கூட்டரங்கம் கட்டப்பட்டு வருகிறது.
கூட்ட அரங்கின் தரைத் தளத்தில் வாரம்தோறும் குறைதீா் கூட்டம் நடைபெறும். முதல் தளத்தில் காணொலி மூலம் நடைபெறும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்த ஏதுவாக தேவையான வசதிகள் செய்யப்படும். இரண்டாம் தளத்தில் பழைய ஆட்சியா் அலுவலக கட்டடத்தில் உள்ள சில துறைகள் மாற்றப்படும் என்றாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன்,அண்ணாதுரை எம்பி, வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், மாநகராட்சி ஆணையா் காந்திராஜன், திருவண்ணாமலை முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஸ்ரீதரன் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.