Close
நவம்பர் 15, 2024 4:57 காலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் பரவலாக மழை : விவசாயிகள் மகிழ்ச்சி

திருவண்ணாமலையில் பெய்த மழை

தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வந்தது.

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் விட்டு விட்டு சாரல் மழையாக துவங்கி கனமழை 1 மணி நேரம் மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதமான சூழலால் குளிர்ச்சியான காற்று நிலவி வருகிறது.

திருவண்ணாமலை, வேங்கிக்கால் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்தது.
திருவண்ணாமலை, வேங்கிக்கால், தீபம் நகர் ,ஆட்சியர் அலுவலகம், வட ஆண்டா பட்டு, கலசப்பாக்கம், அடியண்ணாமலை மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தபடியே இருந்தது.

திடீரென மாலை 4 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நல்லிரவு வரை திருவண்ணாமலை சாரல் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.
மழையிலும் ஏராளமான பக்தர்கள் மழையில் நனைந்தபடி கிரிவலம் வந்து கொண்டிருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த செண்பகத்தோப்பு அணைக்கு சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் நவம்பர் 14 ஆம் தேதி மாலை நிலவரத்தின்படி அணையின் முழு கொள்ளளவு 62.32 அடியாகவும், அணையின் தண்ணீர் இருப்பு 50.12 அடியாகவும், நீர் வெளியேற்றம் 25 கன அடியாக உள்ளது. செண்பகத்தோப்பு அணைக்கு நீர்வரத்தால் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் அதிகரிக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top