மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி மாணவர்களுக்காக தனது உடலை காஞ்சிபுரம் துணை ஆட்சியர் தானம் செய்துள்ளார்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பள்ளிக்கூடம் தெருவை சேர்ந்தவர் க. கருணாநிதி. இவர் தனது மனைவி சுசிலாவுடன் அப்பகுதியில் வசித்து வந்தார்.
சார் பதிவகத்தில் தட்டச்சராக பணி பெற்று அதன் பின் மெல்ல மெல்ல அரசு பணிகளில் வட்டாட்சியர் மற்றும் துணை ஆட்சியர் என பல பதவிகள் வகித்து இறுதியாக செங்கல்பட்டு கலால் அலுவலகத்தில் துணை ஆட்சியராக பணிபுரிந்து கடந்த 2010ல் ஓய்வு பெற்றார், கருணாநிதி.
அதன்பின் தமிழ் மீது ஆர்வம் கொண்ட நிலையில் பல்வேறு தமிழ் துறை சார்ந்த கருத்தரங்குகளில் தனது மனைவியுடன் பங்கேற்று பேசியுள்ளார்.
கடந்த பத்து வருடத்திற்கு முன்பு செங்கம் வட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான படூர் பள்ளிக்கு நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில் பள்ளி கட்டிடங்களை கட்டிக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு இயற்கை எய்தினார். இதற்கு முன்பாக அவர் ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி மருத்துவ மாணவர்களுக்காக தனது உடலை இறந்த பின் தானமாக அளிக்கும் வகையில் பதிவு செய்துள்ளார்.
அவ்வகையில் இவரது இறப்பு குறித்து இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி நிர்வாகத்திற்கு அளித்த தகவலின் பேரில் அவரது உடலை மருத்துவ குழுவினர் வந்து பெற்றுக் கொண்டனர்.
அனைவருக்கும் பயனுள்ள வகையில் உடல் தானம் செய்யும் பணியினை 75 வயதிலும் விழிப்புணர்வு செய்துள்ள அவரது செயலை அப்பகுதியில் உள்ள அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் இவர் தற்போது வரை இவர் தனது வீட்டுக்கு மட்டுமல்லாமல் அருகில் உள்ள வீடுகளில் வசிக்கும் நபர்களை பத்திரிகை படிக்க வைத்து மாணவர்களையும் ஊக்குவித்து வந்துள்ளார்.
அவரது உடலுக்கு நண்பர்கள் உடன் பணிபுரிந்த அலுவலர்கள் மற்றும் அப்பகுதிவாசிகள் என அனைவரும் மரியாதை செலுத்தினர்.