Close
நவம்பர் 15, 2024 1:45 மணி

சிவகங்கையில் கூட்டுறவு வாரவிழாவை துவக்கி வைத்த அமைச்சர் பெரியகருப்பன்

கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன் முன்னிலையில் உறுதி மொழி படிக்கப்பட்டது.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டத்தில் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2024-ஐ முன்னிட்டு,மண்டல இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில்,
கூட்டுறவுகொடியினை ஏற்றி  வைத்து, விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் ஆகிய நிகழ்வுகளை துவக்கி வைத்தார்.

கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டத்தில் 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2024-ஐ முன்னிட்டு, சிவகங்கையிலுள்ள மண்டல இணைப்
பதிவாளர் அலுவலக வளாகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி ரவிக்குமார் முன்னிலையில் கூட்டுறவு கொடியினை,
ஏற்றி வைத்து, விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு மற்றும் சிறப்பு மருத்துவ முகாம், மரக்கன்றுகள் நடுதல் ஆகிய நிகழ்வுகளை துவக்கி வைத்தார்.

இந்த விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன் பேசியதாவது:-
கூட்டுறவுவே நாட்டுயர்வு என்ற அடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் கூட்டுறவுத் துறையின் சார்பில், எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி பொதுமக்களை பயன்பெறச் செய்து வருகிறார்கள். தமிழக முழுவதும் கூட்டுறவுத்துறையின் சார்பில், தற்போது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா-2024 சிறப்பாக தொடங்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு இயக்கத்தின் கொள்கைகள், நோக்கம், செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், அதன் மூலம் கூட்டுறவில் அனைவரும் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்ற நோக்கிலும், ஒவ்வொரு ஆண்டும் “நவம்பர் 14-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை, அனைத்திந்திய
கூட்டுறவு வார விழா” இந்திய அளவில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களும், வங்கிகளும் மிக நீண்ட வரலாற்றையும், சிறந்த பாரம்பரியத்தையும் கொண்டதாகத் திகழ்வதால், தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கூட்டுறவு வார விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, 71-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா இன்றையதினம் தொடங்கி வருகின்ற 20.11.2024 வரை பல்வேறு சிறப்பான நிகழ்வுகளுடன், இவ்வாண்டு கூட்டுறவு வார விழா ”தமிழ்நாட்டின் சமூக பொருளாதார மேம்பாட்டில் கூட்டுறவின் பங்கு” என்ற முதன்மை மையக் கருப்பொருளின் அடிப்படையில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.

14.11.2024 முதல் 20.11.2024 வரை நடைபெறும் கூட்டுறவு வார விழாவில், கூட்டுறவு அமைச்சகத்தின் புதிய முன்னெடுப்புகள் மூலம் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்துதல், கூட்டுறவுகளில்
புதுமை, தொழில் நுட்பம் மற்றும் சிறந்த நிர்வாகத்தினை ஏற்படுத்துதல், தொழில் முனைவு, வேலைவாய்ப்பு மற்றும் திறன்மேம்பாடு ஆகியவற்றை வளர்ப்பதில் கூட்டுறவுகளின் பங்கு, கூட்டுறவு நிறுவனங்களை உறுமாற்றுதல், கூட்டுறவுகளுக்கு இடையே கூட்டுறவை வலுப்படுத்துதல், பெண்கள், இளைஞர்கள் மற்றும் நலிந்த பிரிவினருக்கான கூட்டுறவுகள், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதிலும், மேம்பட்ட உலகை உருவாக்குவதில் கூட்டுறவுகளின் பங்குகள் என ஒவ்வொரு நாளும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் 71-வது கூட்டுறவு வார விழா இவ்வாண்டு தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.

இக்கூட்டுறவு வார விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு நாளும் மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளும், கூட்டுறவு சங்கங்களின் திட்டங்களை விளக்கும் சிறப்பு முகாம்களும், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் எளிதில் கடன் பெறுவதற்கு ஏதுவான சிறப்பு முகாம்களும், கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்குகள் துவங்குவதற்கான சிறப்பு முகாம்களும், இரத்த தான முகாம்களும், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

அதனடிப்படையில், சிவகங்கைமாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒரு வார காலத்திற்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்திட திட்டமிடப்பட்டு, அதன்படி இன்றைய தினம் சிவகங்கை மண்டல இணை பதிவாளர் அலுவலக வளாகத்தில், கூட்டுறவு கொடியினை ஏற்றி வைத்தல், உறுதிமொழி ஏற்றல், சிவகங்கை கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிறுவன மாணாக்கர்கள் மற்றும் சிவகங்கை அரசினர் தொழில்பயிற்சி நிலைய மாணாக்கர்கள் என 300க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியும் மற்றும் கூட்டுறவுத்
துறையின் அனைத்து நிலை அலுவலர்கள், பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமும் மற்றும் மரக்கன்றுகள் நடுதல் போன்ற நிகழ்வுகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்று, வருகின்ற 20.11.2024 அன்று வரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வகையான
நிகழ்வுகள்தொடர்ந்து நடைபெறவுள்ளது.

அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் நாளையதினம் (15.11.2024) சிவகங்கை முத்து மஹாலில் கூட்டுறவு வார விழா நிகழ்ச்சி  நடத்தப்பட்டு, சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் மற்றும் பரிசுகளும், சங்க உறுப்பினர்களுக்கு கடனுதவிகள் வழங்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
அதேபோன்று, 16.11.2024 அன்று சிவகங்கை சரகத்தில் உள்ள கூட்டுறவு நிறுவன வளாகங்களிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் நடைபெறும் நிகழ்வும், 17.11.2024 அன்று இடையமேலூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் இலவச கால்நடை சிகிச்சை முகாம்களும் நடத்தபட உள்ளது.

மேலும், 18.11.2024 அன்று சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இரத்ததான முகாம் நடைபெறும் நிகழ்வும், 19.11.2024 அன்று காரைக்குடி சரகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவன வளாகங்களிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் சந்திப்பு முகாம்கள் நடைபெறும் நிகழ்வும், அதேபோன்று,
20.11.2024 அன்று சிவகங்கை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய வளாகத்தில் கூட்டுறவு பணியாளர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் போன்ற பல்வேறு நிகழ்வுகளுடன் கூட்டுறவு வார விழா  சிறப்பாக நடைபெறவுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வரும் 71-வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழாவினை முன்னிட்டு, பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் நடைபெறவுள்ள பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளில் பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.,
இவ்வாறு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 1983 பிரிவு 10-ன் கீழ் சங்கம் பதிவு செய்யப்பட்டதற்கான சான்றினை, காரைக்குடி சரகத்திற்குட்பட்ட கண்ணங்குடி வட்டாரத்தைச் சார்ந்த ஆர்.டி.147-கண்ணங்குடி வட்டார விவசாயிகள் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் மற்றும் திருப்பத்தூர் வட்டாரத்தைச் சார்ந்த ஆர்.டி.148 திருப்பத்தூர் வட்டார விவசாயிகள் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவைகளை
சார்ந்தோர்களிடம் புதிதாக பதிவு செய்யப்பட்ட சங்கத்திற்கான சான்றினை கூட்டுறவுத் துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.

கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் இராஜேந்திர பிரசாத், மேலாண்மை இயக்குநர் (மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி) உமா மகேஸ்வரி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை நகர்மன்ற  தலைவர் துரை ஆனந்த் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top