திருவண்ணாமலையில் பௌர்ணமியொட்டி 2வது நாளாக பக்தர்கள் கிரிவலம் செய்தனர். கோயிலில் 4 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை உள்ள 12 மாதங்களிலும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாத பௌர்ணமிக்கும் பல்வேறு மாவட்ட மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் மேற்கொள்வது வழக்கம்.
அதன்படி இம்மாதத்தின் ஐப்பசி மாத பௌர்ணமி நேற்று முன்தினம் 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5.19 மணிக்கு துவங்கி நேற்று சனிக்கிழமை அதிகாலை 3.33 மணிக்கு நிறைவடைந்தது.
இந்நிலையில் 2வது நாளாக நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று அண்ணாமலையாரை வழிபட்டனர். நேற்று அதிகாலை அண்ணாமலையார் கோயிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ராஜகோபுரம் வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய வசதியாக, சிறப்பு கட்டண தரிசனம், அமர்வு தரிசனம் ஆகியவை நேற்றும் ரத்து செய்யப்பட்டது. பொது தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இவர்கள் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கிரிவலம் முடித்துவிட்டு தங்களது ஊர்களுக்கு செல்ல பக்தர்கள் ரயில் நிலையம் மற்றும் தற்காலிக பஸ் நிலையங்களில் குவிந்தனர். ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியதால் குழந்தைகளுடன் வந்திருந்த தாய்மார்களும், முதியவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
ஐயப்பன் கோயிலில்
அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள ஐயப்பன் சன்னதியிலும் வேலூர் ரோடு வேங்கிக்கால் பகுதி உள்ள ஐயப்பன் கோயிலிலும் ஏராளமான பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியை முன்னிட்டு மாலை அனிந்து விரதத்தை துவக்கினார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு இந்தியா முழுவதும் இருந்து திரளான பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மண்டல பூஜைக்காக ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரம் இருந்து செல்வது வழக்கம். 48 நாட்கள் விரதம் இருப்பவர்கள் கார்த்திகை முதல் தேதி மாலை அணிந்து விரதத்தை துவக்குவார்கள்.
அதன்படி திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுவாமிக்கு மகாதீபாரதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பக்தர்களுக்கு மாலை அணிவிப்பு நிகழ்ச்சியில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, திரளான ஐயப்ப பக்தர்கள் கலந்துகொண்டு குரு சாமியிடம் மாலை அணிந்து ஐயப்பபைன வணங்கி விரதத்தை துவக்கினார்கள். தொடர்ந்து மகர ஜோதி வரை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் தினசரி சிறப்பு பூஜைகள் மற்றும் பஜனை நடைபெறும்.