Close
நவம்பர் 17, 2024 10:00 மணி

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு கொதிகலன் வெடித்து பயங்கர விபத்து: தொழிலாளி கவலைக்கிடம்.

கும்மிடிப்பூண்டி பாத்த பாளையத்தில் அமைந்துள்ளது காமாட்சி மின் உற்பத்தி மற்றும் கம்பி உற்பத்தி தனியார் தொழிற்சாலை. பல வருடங்களாக இயங்கி வரும் இந்த தொழிற்சாலையில் நேற்று இரவு நேர பணிக்காக வந்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய அகிலேஷ் யாதவ் என்ற தொழிலாளி மிகவும் ஆபத்தான கொதிகலன் பிரிவில் வேலை செய்து கொண்டிருந்துள்ளார்.

அப்போது இரும்பு கொதிகலனில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கொதிகலன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அங்கு எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் பணியாற்றி வந்ததாக கூறப்படும் அகிலேஷ் யாதவின் மீது கொதிகலனில் இருந்து சிதறிய இரும்புக் குழம்புபட்டு பயங்கர தீக்காயம் ஏற்பட்டது.

தீக்காயம் அடைந்த அகிலேஷ் யாதவை மீட்டு தொழிற்சாலை நிர்வாகம் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 80% தீக்காயங்கள் ஏற்பட்டதால் அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் பணியாற்றுவதே இது போன்ற அவரின் நிலைகளுக்கு வழிவகுக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top