தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி நீதிமன்ற உத்தரவின் பேரில் புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.
சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரிக்கு எதிராக பல்வேறு புகார்கள் குவிந்தன.
இந்த புகார்களின் பேரில் சென்னை, மதுரை திருச்சி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நடிகை கஸ்தூரி மீது இரு தரப்பினரிடையே மோதல் உண்டாக்குதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
சென்னையில் உள்ள வீட்டில் நடிகை கஸ்தூரிக்கு சம்மன் அளிக்க சென்ற போது அவரது வீடு பூட்டப்பட்டு செல்போனும் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்ததை தொடர்ந்து சென்னை பெருநகர காவல் துறை சார்பில் இரண்டு தனிப்படைகள் அமைத்து நடிகை கஸ்தூரி தீவிரமாக தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று ஹைதராபாத்தில் இயக்குனர் ஒருவரது வீட்டில் பதுங்கி இருந்த நடிகை கஸ்தூரியை சென்னை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதனை தொடர்ந்து சென்னை அழைத்து வரப்பட்ட நடிகை கஸ்தூரி இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.
வரும் 29ஆம் தேதி வரை நடிகை கஸ்தூரியை சிறையில் அடைக்க எழும்பூர் குற்றவியல் மேஜிஸ்ட்ரேட் ரகுபதி ராஜா உத்தரவிட்டதை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் புழல் மகளிர் தனிச்சிறைக்கு நடிகை கஸ்தூரி அழைத்து வரப்பட்டார்.
சிறையில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் முடித்து நடிகை கஸ்தூரி சிறையில் அடைக்கப்பட்டார்.