கலசப்பாக்கம் அடுத்த சென்மாதிமங்கலம் ஊராட்சியில் உள்ள பர்வத மலையை சுற்றி மக்கள் கிரிவலம் செல்வதற்கு பாதை அமைக்க 11 சென்ட் நிலத்தை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் தனது சொந்த நிதியில் நிலத்தை வாங்கிக் கொடுத்துள்ளார்.
தென் கைலாய மலை என அழைக்கப்படும் பருவத மலைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பருவத மலைக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். அதுவும் குறிப்பாக பௌர்ணமி அம்மாவாசை நாட்கள் மாதப்பிறப்பு நாட்களில் ஸ்ரீ மல்லிகார்ஜுனேஸ்வரர் சமேத பிரம்மாம்பிகை தாயாரை தரிசனம் செய்வதற்கு நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் பருவதமலை கிரிவலம் செல்லும் பாதையான கடலாடி கிராமத்தில் இருந்து பட்டியந்தல் வரை செல்லும் பச்சையம்மன் கோவில் சாலை மிகவும் பழுதடைந்து உள்ளது.
இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் எம்எல்ஏவிடம் கோரிக்கையாக வைத்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் இந்த சாலையை நேரில் பார்வையிட்டு ஆய்வும் மேற்கொண்டார்.
கடலாடியிலிருந்து பச்சையம்மன் கோவில் செல்லும் சாலையின் குறுக்கே தனியாருக்கு சொந்தமான நிலம் இருந்ததால் அங்கு அரசின் சார்பில் சாலை அமைக்க முடியாத நிலை இருப்பது தெரிய வந்தது.
சொந்த நிதியில்
உடனடியாக புதிய சாலை அமைப்பதற்கு தேவையான நிலத்தை நிலத்தில் உரிமையாளரிடம் பேசி 11 சென்ட் நிலத்தை கலசப்பாக்கம் எம்எல்ஏ சரவணன் தனது சொந்த நிதியில் வாங்கித் தந்தார்.
கிரிவலப் பாதை அமைப்பதற்கு தேவையான 11 சென்ட் நிலத்தை கலசப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் பெயரில் எழுதி பதியப்பட்டது.
இந்நிலையில் எம் எல் ஏ கூறுகையில்,
பக்தர்கள் சுலபமான முறையில் கிரிவலம் செல்ல வேண்டும், இப்பணி தொடர்பாக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலுவின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அவர் மூலம் இந்த பகுதியில் கிரிவலம் செல்லும் கிரிவலப் பாதை முழுவதும் தார் சாலை அமைப்பதற்கு வேண்டிய ஆணைகள் பெற்று அதன் மூலம் இந்த பகுதியில் புதிய தார் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும்.
மலை சுற்றும் பாதை முழுவதும் மின்விளக்கு பணி செய்து தர வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்துள்ளோம் அதன் மூலம் இப்பகுதியில் மின்விளக்கு வசதி விரைவில் அமைத்துக் கொடுக்கப்படும் என எம்எல்ஏ சரவணன் கூறினார்.