உசிலம்பட்டி:
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஒவ்வொரு கனமழை காலத்திலும் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்து வீடுகளுக்குள் தண்ணீர் தேங்குவதாக குற்றம் சாட்டி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை மற்றும் மிதமான மழை அடிக்கடி பெய்து வருகிறது.
இந்த கனமழை காரணமாக, உசிலம்பட்டி அருகே கொங்கபட்டி காலனி பகுதி வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து தேங்குவதாகவும், ஒவ்வொரு மழை காலத்திலும் இதே நிலை நீடிப்பதாக குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்த சாலை மறியலால் மதுரை தேனி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.