Close
நவம்பர் 18, 2024 12:31 மணி

தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு: புளியஞ்சோலை அருவிகளில் குளிக்க தடை

புளியஞ்சோலையில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் (கோப்பு படம்)

தொடர் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் புளியஞ்சோலை அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பலத்த மழை இல்லை என்றாலும் நாள் முழுவதும் அவ்வப்போது பெய்யும் மழையால் திருச்சி நகரம் மட்டும் இன்றி புறநகர் பகுதிகளிலும் சாலைகளிலும், தெருக்களிலும் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது.

தொடர்ந்து பெய்து வரும் மழையால் திருச்சி மாவட்ட மக்கள் சூரியனை பார்க்க முடியவில்லை. மக்களின் இயல்பு வாழக்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இன்று காலையில் சிறிது நேரம் வானம் வெளி வாங்கியதால் சூரியன் உதயமாகி விடும் என நினைத்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பிற்பகல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. இதன் காரணமாக திருச்சி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான  குளங்கள், ஏரிகளிலும் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை முக்கொம்பு ஒரு  சுற்றுலா தளம் என்றால் அதற்கு அடுத்த இடத்தை பிடிப்பது கல்லணை. கல்லணை தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தது என்றாலும் திருச்சிக்கு மிக அருகில் இருப்பதால் திருச்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கல்லணையையும் சுற்றி பார்க்க தவறுவது இல்லை.

முக்கொம்பு, கல்லணைக்கு அடுத்து புளியஞ்சோலை திருச்சி மாவட்டத்தின் முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். புளியஞ்சோலை திருச்சி நகரில் இருந்து சுமார் 75 கி.மீ தொலைவில் உள்ளது.

பச்சைமலை மற்றும் கொல்லி மலையின் அடிவாரத்தில் உள்ள புளியஞ்சோலையின் அடர்ந்த காடுகளும், இந்த காடுகளின் நடுவே உள்ள அருவிகளும் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

கடந்த வாரம் முழுவதும் மிதமான அளவில் இங்குள்ள அருவிகளில் தண்ணீர் வந்ததால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்த குளியல் நடத்தினார்கள். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. மலையில் இருந்து வரும் தண்ணீர் இயற்கையான நிறத்திற்கு மாறாக செந்நீராக காட்சி அளி்ப்பதால் இங்குள்ள அருவிகளில்  குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அருவிகளுக்கு செல்லும் பாதையில் தடுப்பு ஏற்படுத்தி வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top