அதிமுக விற்கு ஆபரேஷன் தேவை என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் உள்ள கோஷ்டி பூசல்களை களை எடுத்து கட்சியை பலப்படுத்துவதற்காக கள ஆய்வு குழுவினை அமைத்து உள்ளார். இந்த குழுவினர் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் செய்து அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி அவர்கள் மத்தியில் பேசி கள ஆய்வு செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கோகுல இந்திரா ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
திண்டுக்கல் சீனிவாசன் பேசும் போது கூறியதாவது:-
பல முனைகளிலும் இன்று அதிமுகவை தாக்கிக் கொண்டுள்ளனர். தனி ஒரு மனிதனாக எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சியின் அவலங்களை எடுத்துச் சொல்லி கொண்டிருக்கிறார்.
அதிமுக ஆட்சியின் சாதனைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலினோடு விவாதத்திற்கு தயார் என்றார் இ.பி.எஸ். ஆனால், உதயநிதி ஸ்டாலின் நான் வருகிறேன் என்கிறார். சிங்கமும், எலிக்குட்டியும் ஒன்றா?
முதலமைச்சராக இருந்த ஓ.பி.எஸ் சுக்கு துரோகம் செய்தது சசிகலாவும், டி.டி.வி.தினகரனும் தான். பின்னர் சசிகலா முதல்வராவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். அப்போது தான் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தது. சசிகலா சிறைக்கு சென்றார். எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். கடவுள் அருளாசி இருந்ததால்தான் எடப்பாடி பழனிசாமி முதல்வராக முடிந்தது.
அதிமுகவில் சில மாவட்டங்களில் கோஷ்டி பூசல்கள் உள்ளது. அதை முதலில் சரி செய்ய வேண்டும். ஏனெனில் ஆபரேஷன் செய்தால் மட்டுமே மருத்துவம் பலிக்கும் என்ற நிலை உள்ளது..
அம்மாவின் உதவியாளராக வந்த சசிகலா, பல மாவட்டங்களில் கோடீஸ்வரர்களை உருவாக்கிய சசிகலா, தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆசைப்பட்டார். ஓ.பி.எஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஆசைப்பட்டார். அதனால் தான் அவர்கள் இருவருமே இப்போது செல்லாக்காசாகி விட்டனர்.
இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் பேசினார்.