திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு புதுப்பாளையம் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் தலைமை வகித்தாா். புதுப்பாளையம் பேரூராட்சித் தலைவா் செல்வபாரதி மனோஜ்குமாா், துணைத் தலைவா் மகேஸ்வரி சீனுவாசன், ஒன்றியக் குழு உறுப்பினா் பவ்யா ஆறுமுகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியா் ஸ்ரீதா் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ சரவணன் கலந்து கொண்டு 48 மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினாா்.
அப்போது அவர் பேசுகையில்;
தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் படிக்கும் மாணவர்களுக்காக எண்ணற்ற திட்டங்களும் சலுகைகளும் வழங்கி வருகிறார். அதில் மாணவர்கள் தொலைதூரத்தில் இருந்து வருவதால் அவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கியும், இலவச பஸ் பாஸ் வசதியும் வழங்கி வருகிறார். அதேபோல் படிக்கும் மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி, கற்றல் கற்பித்தல், நான் முதல்வன் என்ற பல்வேறு திட்டங்களை மாணவர்களுக்காக வழங்கி வருகிறார்.
பெண் பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்கு புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் தோறும் ரூபாய் 1000, அதே போல் ஆண் பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்கு தமிழ் புதல்வன் திட்டத்தில் மாதம் தோறும் ரூபாய் 1000 வழங்கப்பட்டு வருகிறது.
இப்படி எண்ணற்ற திட்டங்களும் சலுகைகளும் இந்த ஆட்சியில் தான் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதுப்பாளையம் ஊராட்சியில் உள்ள அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 43 மாணவர்களுக்கு தமிழக அரசு வழங்கும் மிதிவண்டியை இன்று வழங்கப்பட்டுள்ளது . மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி நமது மாவட்டத்திற்கும் நமது பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என பேசினார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.