Close
நவம்பர் 21, 2024 6:26 காலை

ஆசிரியை குடும்பத்திற்கு நிவாரணம்: தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

தஞ்சை மாவட்டத்தில் வகுப்பறையில் படுகொலை செய்யப்பட்ட ஆசிரியர் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ரெங்கராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த 26 வயதுடைய ரமணி என்ற தமிழ் ஆசிரியை குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். மதன்குமார் என்ற நபர் இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட சகோதரிக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு, அவரது மறைவால் வாடும் ஆசிரியரின் குடும்பத்திற்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமீப காலமாக ஆசிரியர்களுக்கு இது போன்ற சமூக விரோதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. மாணவர்களை கண்டித்ததற்காக ஆசிரியர்களை பள்ளிகளுக்குள் புகுந்து தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றவன்னம் உள்ளன. ஆசிரியர்கள் சமூகத்தில் நல்லொழுக்கத்தை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருந்து வருகிறது. பல்வேறு பணி சுமைகளுக்கிடையில் கற்பித்தல் பணியை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு சமூகவிரோதிகளாலும், முன் கோபக்காரர்களாலும் தாக்குதல் நடைபெறுவது தவிர்க்கப்பட வேண்டும். இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் கட்டுப்படுத்த வேண்டுமென்றால் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டும்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் பள்ளி ஆசிரியரை பெற்றோர் ஒருவர் தாக்கிய சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அப்பொழுது முதல் ஆசிரியருக்கு பணி பாதுகாப்பு சட்டம் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, அகில இந்திய ஆசிரியர் கூட்டணியுடன் இணைந்து நாடு முழுவதும் ரத யாத்திரை நடத்தியது. ஆனால் இதுவரை தமிழக அரசு அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. புதிய புதிய நடைமுறைகளின் மூலம் பள்ளிகளில் தேவையற்றவர்களின் தலையீடுகளை ஏற்படுத்தி தருவதில் அரசு தெரிந்தோ, தெரியாமலோ ஈடுபட்டு வருகிறது. இதுவும் ஆசிரியர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதற்கு முக்கிய காரணமாக உள்ளது.

எதிர்கால தலைமுறையை வளமான தலைமுறையாக உருவாக்குவதற்கு கடுமையாக உழைத்து வரும் ஆசிரியர்கள் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள் என்பதை அரசு உணர வேண்டும். ஆசிரியர்கள் இது போன்ற தாக்குதல்கள் எப்போது நிகழும் என்ற அச்சத்தோடு பணிபுரிய வேண்டியுள்ளது. இதனை கடைசி சம்பவமாக இருக்கும் வகையில் உடனடியாக ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வர வேண்டும். வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே அதனை நிறைவேற்றித் தர வேண்டும்.

மேலும் படுகொலையால் உயிரிழந்த ஆசிரியையின் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், அச்சத்தில் இருந்து வரும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்படும் தமிழக அரசு வெளிப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top