Close
நவம்பர் 21, 2024 3:42 மணி

சிவகங்கையில் சிறுபான்மையினர் ஆணையகுழு தலைவர் அருண் கலந்துரையாடல்

சிவகங்கையில் சிறுபான்மையினர் ஆணையக்குழு தலைவர் அருண் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் மூலம் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் அருண் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், தலைமையில், உறுப்பினர் செயலர் வி.சம்பத், முன்னிலையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணைய துணைத் தலைவர் எம்.எம். அப்துல் குத்தூஸ் மற்றும் உறுப்பினர்களான பிரவின்குமார் , ராஜேந்திர பிரசாத் ,எஸ்.வசந்த் மற்றும் ஜோ.முகமது ரஃபீ ஆகியோர்களுடன், சிறுபான்மையின சமுதாயத்தை சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட  உதவிகளை வழங்கி ஆணைய தலைவர் அருண் பேசியதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர், தலைமையிலான தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் பிரிவு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், சிறுபான்மையினரின் பொருளாதார முன்னேற்றத் திற்காகவும், பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
அந்தவகையில், சிறுபான்மையினர்களின் பல்வேறு கோரிக்கைகள் மற்றும் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்யும் பணிகளை தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில், தமிழகத்தில் நாமக்கல், சேலம், கரூர், கோயம்புத்தூர் மாவட்டங்களில் சிறுபான்மையின சமுதாயத்தை சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு, அக்கூட்டத்தின் வாயிலாகவே தகுதியுடைய கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கைகள் அன்றைய தினமே மேற் கொள்ளப்பட்டது குறிப்பிடதக்கதாகும்.

அதனைத் தொடர்ந்து, இன்று சிவகங்கை மாவட்டத்தில் சிறுபான்மையின சமுதாயத்தை சார்ந்த தலைவர்கள் மற்றும் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு, இதில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மூலமாக உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளும் அடிப்படையில் இக்கூட்டமானது தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் சார்பில் மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இதுதவிர கூடுதலாக புதிய கோரிக்கைகள் இருப்பின், அதனையும் அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று, அக்கோரிக்கைகள் தொடர்பாக சட்டசபையில் தீர்மானங்கள் நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் வாயிலாக பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகள் (ஜொராஷ்டிரியர்கள்), சமணம் (ஜெயின்) சமயத்தை சேர்ந்தவர்கள் மதவழி சிறுபான்மையினத்தவராக கருதப்படுகின்றனர். சிறுபான்மை இனத்தை சார்ந்தவர்களை பாதுகாத்திடும் பொருட்டு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் தமிழ்நாடு சட்டங்களில் பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவ்வாறான சட்டங்களில் அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்புகள் மற்றும் நெறிமுறைகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆராய்ந்து மறுமதிப்பீடு செய்தல், நடைமுறையிலுள்ள சட்ட திட்டங்களை செவ்வனே செயல்படுத்தி, நடைமுறைக்கு வரும் பொருட்டு, சம்மந்தப்பட்ட துறைகள் அல்லது அமைப்புகளுக்கு தேவையான பரிந்துரைகளை அனுப்புதல், தமிழ்நாட்டிலுள்ள சிறுபான்மையினரின் நலனுக்காக, அரசின் கொள்கை மற்றும் திட்டங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு, சிறு
பான்மையினருக்கெதிராக , வேறுபாடுகள் ஏற்படுவதைத்
தவிர்க்கும் பொருட்டான ஆராய்ச்சிகள், ஆய்வுகள் மற்றும் பகுப்பாய்வுகள், தேவைப்படும் கருத்துகளை அரசுக்கு தெரிவித்தல், சிறுபான்மையினர் தொடர்பாக ,அரசு மேற்கொள்ள உத்தேசிக்கும் சட்டம் மற்றும் நலத்திட்டங்கள் குறித்து, உரிய கருத்துகளை தெரிவித்தல், மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துதல், பராமரித்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான வழிவகைளை அரசுக்கு பரிந்துரைத்தல், வரையறுக்கப்பட்ட கால இடைவெளியில் மாநில அரசுக்கு அறிக்கை அனுப்புதல் உள்ளிட்ட பணிகளை தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையக்குழு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

மேலும், சிவகங்கை மாவட்டத்தில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாவட்டத்திலுள்ள சிறுபான்மையினர் இனத்தைச் சார்ந்தவர்களில் 5.55 சதவீதம் முஸ்லிம்களும், 5.64 சதவீதம் கிறிஸ்தவர்கள் சமநிலையில் உள்ளனர்.
சிவகங்கை மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவி சங்கங்கள் சார்பில், ஆதரவற்ற கணவனால் கைவிடப்பட்ட மற்றும் வயதான இஸ்லாமிய வகுப்பைச் சார்ந்த பெண்களுக்கு உதவிடும் வகையில், சுயதொழில் மேற்கொண்டு பயன்பெறும் பொருட்டு, கடந்த 2021 முதல் 2024 வரை 533 நபர்களுக்கு மாவட்ட முஸ்லீம் மகளிர் உதவும் சங்கத்தின் மூலம் சுயதொழில் செய்வதற்கு ரூ.69.51 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் கீழ் 2023-2024 மற்றும் 2024-2025 ஆம் ஆண்டுகளில் 6 நபர்களுக்கு மொத்தம் ரூ.1,21,000/- மதிப்பீட்டிலான ஓய்வூதிய தொகையும், 2021-2022 மற்றும் 2022-2023 ஆண்டுகளில் பதிவு பெற்ற வக்ஃபு நிறுவனங்களில் பணிபுரியும் 04 உலமா பணியாளர்களுக்கு ரூ.1,00,000/- மதிப்பீட்டில் மானிய இருசக்கர வாகனமும் வழங்கப்பட்டுள்ளது.
பாரதப் பிரதமரின் புதிய 15 அம்சத் திட்டத்தின் கீழ் ஒன்றிய/மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து, தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்களுடன் காலாண்டு ஆய்வு கூட்டமும் மாவட்ட ஆட்சித்தலைவர் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2021-2022 ஆம் ஆண்டுகளில் 218 உறுப்பினர்களுக்கு ரூ.11.29 இலட்சம் மதிப்பீட்டில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கங்கள் வாயிலாக கடந்த 2021 முதல் 2024 வரை 370 நபர்களுக்கு ரூ.55.39 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் 99 நபர்களுக்கு தற்சமயம் வரை நல வாரிய அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. கிறித்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகளை மேற்கொள்ள அரசு நிதியுதவி வழங்கும் அடிப்படையில், சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள திரு இருதய ஆண்டவர் தேவாலயம் தொன்மையான தேவாலயமாக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் அவர்களின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையின் படி மேற்கண்ட தேவாலயம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, அதற்கான அரசாணை நாள்:05.11.2024-ன்படி ரூ.1,55,20,016/-மதிப்பீட்டில் ஆணை பிறப்பிக்கப்பட்டு, பழுது பார்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிக்கென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் அவ்வாணை இந்நிகழ்ச்சியின் வாயிலாக இடைக்காட்டூர் தேவாலய ஆயரிடம் வழங்கப்படுவது, சிறப்பிற்குரிய
ஒன்றாகும். மேலும், சிறுபான்மையின மாணவிகளுக்கான கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 2022-2023,2023-2024 மற்றும் 2024-2025 ஆகிய நிதியாண்டுகளில் மொத்தம் 2,649 மாணவியர்களுக்கு ரூ.16.64 இலட்சம் மதிப்பீட்டில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கிறிஸ்தவர்களின் பயன்பாட்டிற்காக கல்லறை தோட்டம் அமைத்தல் மற்றும் முஸ்லிம்களின் பயன்பாட்டிற்காக கபர்ஸ்தான் அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் மற்றும் கல்லறை தோட்டங்கள், கபர்ஸ்தானங்களுக்கு சுற்றுச்சுவர் மற்றும் நடைபாதை ஏற்படுத்தி அதில், பேவர் பிளாக் அமைத்து தருதல் போன்ற கோரிக்கைகள் மீதான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட துறை ரீதியாக மேற்கொள்ளும் பொருட்டும், இக்கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) சார்பில், தமிழ்நாட்டில் பொருளாதாரத்தில் பின் தங்கிய இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பாரசியர்கள் மற்றும் ஜெயின் பிரிவைச் சார்ந்த மதவழி சிறுபான்மையின மக்கள் சுயதொழில் மேற்கொள்ள குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபர் கடனுதவி, சுய உதவிக்குழு கடனுதவி மற்றும் கல்வி கடனுதவி போன்ற பல்வேறு கடனுதவிகள் தகுதியின் அடிப்படையில் வழங்கப்பட்டு, அதன்படி 2021 முதல் தற்சமயம் வரை 258 பயனாளிகளுக்கு ரூ.2.60 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினருக்கு மின்மோட்டாருடன் கூடிய விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதிகளின் அடிப்படையில் 2022-2023 மற்றும் 2023-2024 ஆகிய நிதியாண்டுகளில் 100 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.05.69 இலட்சம் மதிப்பீட்டில் விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

பிரதான் மந்திரி ஜான் விகாஸ் காரியக்ரம் (PMJVK) என்ற ஒன்றிய அரசின் நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆரோக்கியம், கல்வி, திறன் மேம்பாடு, விளையாட்டு, குடிநீர் வசதி, சூரிய சக்தி, பொது சுகாதாரம் மற்றும் பெண்கள் மேம்பாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகள், நகரங்கள் மற்றும் கிராமங்களில் சிறுபான்மையினர் செறிவூட்டப்பட்ட பகுதிகளில், சிறுபான்மையினர் மக்கள் தொகை 25 சதவீதத்திற்கும் அதிகமாக வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து, அப்பகுதியில் சிறுபான்மையினருக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்றவைகளும் இத்திட்டத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிகழ்ச்சியின் வாயிலாக மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவி சங்கத்தை சார்ந்த 05 பயனாளிகளுக்கு தலா ரூ.20,000/- மதிப்பீட்டிலான கல்வி உதவித்தொகைக்கான காசோலையும், 03 பயனாளிகளுக்கு தலா ரூ.5,000/-மதிப்பீட்டிலான சிறு தொழில் தொடங்குவதற்கான ஆணைகளையும் மற்றும் 49 பயனாளிகளுக்கு தலா ரூ.10,000/- மதிப்பீட்டிலான முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை மற்றும் சிறு தொழில் தொடங்குவதற்கான ஆணைகளையும், மாவட்ட கிறித்துவ மகளிர் உதவும் சங்கத்தை சார்ந்த 13 பயனாளிகளுக்கு தலா ரூ.15,000/- மதிப்பீட்டில் ஆடு வளர்ப்பு, மாடு வளர்ப்பு மற்றும் காய்கறி வியாபாரத்திற்கான ஆணைகளையும், கிறித்துவ தேவாலாயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் 25 நபர்களுக்கு அடையாள அட்டையும், 02 நபர்களுக்கு உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கான நலவாரிய அட்டையும், 03 நபர்களுக்கு கிறித்துவ தேவாலாயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்களுக்கான நலவாரிய அலுவல் சாரா உறுப்பினர் நியமன ஆணையும் மற்றும் கூட்டுறவுத்துறையின் சார்பில் டாம்கோ கடன் திட்டத்தின் கீழ் 05 பயனாளிகளுக்கு தலா ரூ.47,500/- மதிப்பீட்டில் சிறுதொழில் கடனுதவிக்கான ஆணையும், 03 மகளிர் சுய உதவிக்குழு சங்கங்களைச் சார்ந்த 36 உறுப்பினர்களுக்கு ரூ.34,19,500/- மதிப்பீட்டிலான மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான கடனுதவியும் என ஆக மொத்தம் 141 நபர்களுக்கு ரூ.44,57,000/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சியின் வாயிலாக சிறுபான்மையினர் நல பிரிவு அமைப்புகளைச் சார்ந்தோர்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களைப் பெற்று, கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ், இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) இராஜேந்திர பிரசாத், மேலாண்மை இயக்குநர் (மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி) உமா மகேஸ்வரி, மகளிர் திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜெயமணி, காரைக்குடி மாநகராட்சி மற்றும் அனைத்து நகராட்சி ஆணையாளர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், வட்டாட்சியர்கள், சிறுபான்மையினர் நல பிரிவு அமைப்புகளைச் சார்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள், பயனாளிகள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top