திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் உயிரிழந்த தந்தையின் சடலத்துடன் வீட்டில் 5 நாள்களாக மகன் தங்கியிருந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனா். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வடிவேல் தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி. இவரது மனைவி மோகனராணி. இவா்களது மகன் அரவிந்தன்.
அரவிந்தன் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென மனநிலை பாதிக்கப்பட்டதால் வங்கி பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றாா். மேலும், மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.
மோகனராணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாா். இதனால் அரவிந்தனை, அவரது தந்தை கோவிந்தசாமி பராமரித்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 5 நாள்களாக இவா்களது வீட்டிலிருந்து யாரும் வெளியே வரவில்லையாம். தூய்மை பணியாளர்கள் தினமும் கோவிந்தசாமி வீட்டில் குப்பைகளை பெற்று செல்வது வழக்கம்.
ஆனால் கடந்த 5 நாட்களாக குப்பைகளை தரவில்லை. அவரது வீடும் உள்பக்கமாக பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தூய்மை பணியாளர்கள், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தனர்.
மேலும், வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியது குறித்து, அக்கம்பக்கத்தினா் வந்தவாசி தெற்கு காவல் நிலைய த்திற்கு தகவல் தெரிவித்தனா்.
இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர்கள் விநாயகமூர்த்தி, முருகன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டைத் திறந்து பாா்த்தபோது, அங்கிருந்த ஓா் அறையில் கோவிந்தசாமி இறந்து கிடந்ததும், மற்றொரு அறையில் அரவிந்தன் தங்கியிருந்ததும் தெரிய வந்தது. அவர் இறந்து 5 நாட்களுக்கு மேலாகியிருக்கலாம் என்பதால் சடலம் அழுகிய நிலையில் இருந்தது.
இதையடுத்து, கோவிந்தசாமியின் உடலை காவல்துறையினர் மீட்டு உடற்கூறாய்வுக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அரவிந்தன் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தந்தை இறந்தது தெரியாமல் அவரும் உணவு, தண்ணீர் இன்றி இருந்துள்ளார். இதையடுத்து காவல்துறையினர் அரவிந்தனை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வந்தவாசி தெற்கு காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.