திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள வெளுங்கனந்தல் ஊராட்சியில் ஊட்டச்சத்தை உறுதி செய்து திட்டத்தின் கீழ் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தலைமை தாங்கினார் .மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் பாரதி இராமஜெயம் ,ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சரண்யா அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து வைத்து ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி பேசியதாவது;
தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களும் சலுகைகளும் வழங்கி வருகிறார். அதில் ஒன்றான ஊட்டச்சத்தை உறுதி செய்து திட்டத்தில் கீழ் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா இப்போது நடைபெற்று உள்ளது.
இந்த விழாவில் ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பாக பிறந்தது முதல் ஆறு மாதம் வரை வயதுடைய ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்தை உறுதி செய்து திட்டத்தின் கீழ் தற்போது பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் பெற்ற குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை தொடர்ந்து தமிழக அரசு கண்காணித்து குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்து பொருட்களையும் அரசு வழங்கி வருகிறது என சட்டப்பேரவை துணை சபாநாயகர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய துணைத் தலைவர் உஷாராணி, ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், உதவி பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ,அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.