நாமக்கல் :
நாமக்கல் அருகே ஆசிரியர் இல்லாமல் செயல்படும் அரசு தொடக்கப்பள்ளிக்கு, தேவையான ஆசிரியர்கள் நியமிக்கக் கோரி பள்ளி முன்பு குழந்தைகள் தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.
நாமக்கல் அருகே உள்ள, பொம்மசமுத்திரம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பெருமாப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் அந்த கிராமத்தை சேர்ந்த 52 மாணவ மணவிகள் 1 முதல் 5ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். பள்ளியில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.
மேலும், இப்பள்ளியில் ஒரு ஆசிரியர் மட்டுமே கடந்த 18 மாதங்களுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். அவரே 1 முதல் 5 வகுப்புகளுக்கும் பாடம் நடத்தி வருகிறார். இந்தநிலையில், தற்போது அந்த ஆசிரியரும் தற்போது மெடிக்கல் லீவில் சென்று விட்ட நிலையில், ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் பள்ளிக்கு வந்து சென்றனர். இதனால் பாதிக்கப்பட்ட மாணவ மாணவிகள் பள்ளி நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து குழந்தைகளின் பெற்றோர்கள் சிலர் கூறியதாவது:
பெருமாப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில், கடந்த 2 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. 2 ஆசிரியர்கள் இருந்த நிலையில், தற்போது ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் இருந்து வருகின்றார்,
நிரந்தரமாக உரிய ஆசிரியர்களை பணிக்கு அமர்த்த வேண்டும். மேலும் பள்ளியின் கட்டிடம் கட்டி பல ஆண்டுகளாக ஆகி விட்ட நிலையில் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே தலைமை ஆசிரியர் மற்றும் தேவையான ஆசிரியர்களை நியமித்து, பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும்.
பள்ளி சுகாதாரமாக இல்லாததால் மழைக்காலங்களில் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு தொற்று நோய்கள் ஏற்படுகிறது. இப்பகுதியில் உள்ள ஏழை மக்கள் அரசு பள்ளியை மட்டுமே நம்பி குழந்தைகளை படிக்க வைக்கின்றனர்.
தற்போது பள்ளியில் கட்டிடங்கள் சரியாக இல்லை மற்றும் ஆசிரியர்கள் இல்லாததால் பல குழந்தைகளை வேறு பள்ளிக்கு கொண்டு போய் சிலர் சேர்த்து வருவதாக அவர் தெரிவித்தனர்.