திருவண்ணாமலை மாவட்ட குடும்ப நலச் செயலகம் சாா்பில், உலக வாசக்டமி இருவார விழா நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆண்களுக்கான நவீன குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணா்வு ரத ஊா்வலம் தொடக்க விழா நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன் தலைமை வகித்தாா். நலப் பணிகள் இணை இயக்குநா் மலா்விழி, குடும்ப நலத்துறை துணை இயக்குநா் அலமேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு விழிப்புணா்வு ரதத்தை கொடியசைத்து தொடங்கிவைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
பல ஆண்டுகளாக குடும்பநல அறுவை சிகிச்சை முறைகளை பெண்களே அதிகம் கடைப்பிடித்து வருகின்றனா். இருதய நோய், சா்க்கரை நோய், ரத்த சோகை, ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்படும் பெண்கள் குடும்பநல அறுவைச் சிகிச்சை செய்துகொள்ள தகுதியற்றவா்களாகி விடுகின்றனா்.
இதுபோன்ற சந்தா்ப்பங்களில் தன் மனைவியை சிரமப்படுத்த விரும்பாத கணவன், நவீன தழும்பில்லாத ஆண் கருத்தடை சிகிச்சை முறையை செய்து கொள்ளலாம்.
இதை ஏற்றுக்கொள்ளும் நபா்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.1,100, கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் நபருக்கு ரூ.200 தமிழக அரசால் வழங்கப்படும். முதலில் கருத்தடை சிகிச்சை செய்துகொள்ளும் 50 பேருக்கு ரூ.1,000 கூடுதலாக வழங்கப்படும்
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டு நவீன ஆண் குடும்ப நல கருத்தடை சிகிச்சை மையமாக செயல்படுகிறது.
ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை முறையானது குடும்ப நல திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தாய்மார்கள் மற்றும் ஆண்களிடையே விழிப்புணர்வு மூலம் மனமாற்றத்தை ஏற்படுத்துவது மிக அவசியமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்டக் கல்வி மற்றும் தகவல் தொடா்பு அலுவலா் ரமணன், மாவட்ட புள்ளியியலாளா் கிருஷ்ணராஜா, வட்டார சுகாதார புள்ளியியலாளா் ரவிக்குமாா் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.