பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகவும்,, நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம், ஞான தபோதனரை வா வென்று அழைக்கும் மலை அண்ணாமலை, சைவத்தின் தலைநகரம் என பல சிறப்புகள் பெற்றது திருவண்ணாமலை.
ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த நிலையில் இந்த ஆண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாண்டிற்கான கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 13ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் அன்று மாலை மகாதீபமும் ஏற்றப்படு கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, டிசம்பர் 10 ஆம் தேதி திருத்தேர் திருவிழா நடைபெற உள்ளது. இந்த தீபத்திருவிழாவில் சுமார் 40 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களுக்கு தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
திடீர் தங்கும் விடுதிகளாக மாறிய வீடுகள்
வெளிமாநில பக்தர்களின் வருகை மிக அதிக அளவில் தற்போது இருப்பதால் திருவண்ணாமலையில் மூளை முடுக்கெல்லாம் தங்கும் விடுதிகள் பெருகி வருகிறது.
வாடகை குடியிருப்பு வீடுகள் திருமண மண்டபங்கள் ஆகியவை தங்கும் விடுதிகளாக மாற்றப்பட்டுவிட்டன. மேலும் கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா பக்தர்கள் திருவண்ணாமலையில் வீட்டு மனைகளை அதிக அளவில் வாங்கி குவித்து வருகின்றனர். திருவண்ணாமலையில் வீட்டு மனைகளின் விலை தற்போது சென்னை விலையை மிஞ்சும் அளவில் உள்ளது.
தங்களது வீடுகளை விடுதிகளாக மாற்றுபவர்கள் எவரும் மாநகராட்சி இடம் எந்தவிதமான அனுமதியுமே பெற்றதாக தெரியவில்லை.
மாநகராட்சிக்கு தெரிவித்தால் வரி உயர்வு மின்சார கட்டணமும் உயரும் என்பதால் எதனையும் தெரிவிக்காமல் தங்களது வீடுகளை விடுதிகளாக மாற்றி வருகின்றனர்.
இவைகள் குறித்து முறையான விசாரணை செய்து விடுதிகளாக மாறியுள்ள வீடுகளை கண்டறிந்து முறைப்படுத்த வேண்டும் என பலமுறை சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இவ்வாறு வீடுகளை விடுதிகளாக மாற்றி உள்ளவர்கள் பாதுகாப்பிற்காக எவ்விதமான ஏற்பாடுகளும் செய்யவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மாத வாடகையை விட தின வாடகை அதிகமாக வருவதால் தங்களது வீடுகளை விடுதிகளாக மாற்றி வருவதால் தற்போது குடியிருப்பவர்களை உடனடியாக காலி செய்ய சொல்லி வீட்டின் உரிமையாளர்கள் வற்புறுத்துவதாகவும் , வேறு எங்காவது வீடு கிடைக்குமா என்று தேடினால் திருவண்ணாமலை நகரத்தை தாண்டி தான் கிடைக்கிறது. அங்கும் வாடகை மிக அதிகமாக கூறுகிறார்கள். இதற்கு மாவட்ட நிர்வாகம் தான் நிரந்தர தீர்வு காண வேண்டும் என வீடுகளில் குடியிருப்போர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
போலீசார் விசாரணை
இந்நிலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு போலீசார் கிரிவலப் பாதை மற்றும் சுற்று பகுதிகளில் தங்கி இருப்பவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். இதற்காக ஐந்து குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
எத்தனை வருடங்களாக இந்த வீட்டில் தங்கி இருக்கிறீர்கள், எத்தனை பேர் தங்கி இருக்கிறீர்கள், குடும்பத் தலைவரின் பெயர் மற்றும் செல்போன் எண் போன்றவற்றை சேகரித்தனர் . அது மட்டும் இன்றி அந்த வீடுகளில் தங்கி இருக்கும் கட்டிட வேலைக்கு வருபவர்கள் மற்றும் ஓட்டல் கடைக்கு வேலைக்கு வந்து வீடு எடுத்து தங்கி இருக்கும் வெளி மாநில ஆட்களை போலீசார் படம் எடுத்து அவர்களின் பெயர் மற்றும் முழு விவரங்களை சேகரித்தனர்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதை பெரும்பாக்கம் ரோடு ஆசிரம பகுதிகளில் உள்ளவர்களின் விபரங்கள் முழுவதும் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இப்படி கிரிவலப் பாதை மட்டுமல்லாமல் திருவண்ணாமலை கோவிலை சுற்றி உள்ள அனைத்து பகுதிகளிலும் நடைபெறும் மேலும் அனைத்து உணவு விடுதிகள் ஆசிரமங்கள் அனைத்து இடங்களிலும் விபரங்கள் சேகரிக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.