அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் விதத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கான ஆலோசனை ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது;
கடந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 86.10 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் தேர்ச்சி விகிதம் குறைவதற்கு காரணமான சமூக அறிவியல் மற்றும் கணிதம் பாடங்களில் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 90% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் 716 மாணவர்கள் தமிழ் பாடத்தில் தேர்ச்சி அடையவில்லை, 838 மாணவர்கள் ஆங்கிலத்தில் தேர்ச்சி அடையவில்லை. இத்தகைய மாணவர்களை கண்டறிந்து இவர்களுக்கு தனி கவனம் செலுத்தி தேர்ச்சி விகிதத்தை உயர்த்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் இக்காலாண்டு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தனியாக பயிற்சி அளித்தல் மற்றும் அந்த மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அவர்களை பிரித்து அப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களிடம் ஒப்படைத்து தனி கவனம் செலுத்துதல், அந்த ஒன்றியத்தில் பாடவாரியாக சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.
கடந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி குறைந்த ஒன்றியங்கள் ஆன ஆரணி, வந்தவாசியில் உள்ள பள்ளிகளை தொடர்ந்து கண்காணித்து தேர்ச்சி குறைந்த பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தேர்ச்சி பகுப்பாய்வு கூட்டம் மாதம் தோறும் நடத்துதல் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.
பள்ளி செல்லா இடை நின்ற மாணவர்களை கண்டறிந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனி கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணித்து வருவாய்த்துறை கல்வித்துறை மற்றும் வளர்ச்சித் துறை அலுவலர்களைக் கொண்டு தனி குழு அமைத்து இதுவரை 1505 மாணவர்களை பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தேர்ச்சி விகித சரிவை தவிர்க்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஆட்சியர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன், மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ் ,மாவட்ட சமூக நல அலுவலர் சரண்யா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் சிவா, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.