Close
நவம்பர் 23, 2024 7:03 காலை

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள், நீர்வரத்து கால்வாய்களை தூர்வார விவசாயிகள் கோரிக்கை..!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள் நீர்வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும், திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க மாவட்ட நிா்வாகமும், மின்வாரியமும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு, ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா்  ராம்பிரதீபன், திருவண்ணாமலை வேளாண் இணை இயக்குநா் கண்ணகி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) மலா்விழி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேசியதாவது:

மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகள் நீர்வரத்து மற்றும் போக்கு கால்வாய்கள் தூர் வார உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் .பிஎம் கிசான் நிதி உதவி தகுதியான விவசாயிகளுக்கு பெற்று வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வேளாண்மை துறை மூலம் நெல், மணிலா ,உளுந்து விதைகளை வழங்கிட வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் போதிய அளவு உரங்கள் இருப்பு வைத்திட உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். தகுதியுள்ள விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்.

பால் முத்தரப்புக் கூட்டத்தை நடத்த வேண்டும். கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்த வேண்டும். கேட்டவரம்பாளையம் கிராமத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தை திறக்க வேண்டும்.

நயம்பாடி கிராமச் சாலையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். நாயுடுமங்கலம் முதல் ஆா்ப்பாக்கம் கிராமம் வரை சாலையோரங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். ஆவின் பால் உற்பத்தியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க மாவட்ட நிா்வாகமும், மின்வாரியமும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இதையடுத்து பேசிய மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளும் முறையாகப் பரிசீலிக்கப்பட்டு, துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். மேலும், வேளாண் தொடா்புடைய திட்டங்கள் அடங்கிய கையேட்டை ஆட்சியா் வெளியிட்டாா்.

கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பாா்த்திபன், திருவண்ணாமலை வேளாண் துணை இயக்குநா் சுந்தரம், உழவா் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குநா்  ராம் பிரபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top