Close
நவம்பர் 24, 2024 5:33 மணி

தீபத் திருவிழாவையொட்டி அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்

உலகெங்கும் வாழும் இந்துக்கள், கார்த்திகை தீபத் திருவிழா நாளில் கோயில்கள், வீடுகள், வணிக நிறுவனங்கள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் என தாங்கள் வாழும் இடங்களில் ‘அகல் விளக்கு’ ஏற்றி, ஜோதி வடிவமாய் காட்சி தரும் அண்ணாமலையாரை வணங்குகின்றனர்.

அதன்படி, இந்தாண்டு கார்த்திகைத் தீபத் திருவிழா வரும் டிசம்பர் 13-ம் தேதி நடைபெறவுள்ளது. 2,668 அடி உயரம் உள்ள திரு அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். முன்னதாக, அண்ணாமலையார் கோயிலில் உள்ள மூலவர் சந்நிதியில் அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்படும்.

தீபத்திருவிழாவை ஒட்டி 3 நாட்கள் வீடுகள் தோறும் விளக்கேற்றி அலங்கரிப்பார்கள். கார்த்திகை தீபத் திருவிழாவில் திருக்கோவில்களிலும், வீடுகளிலும் வரிசையாக அகல்விளக்குகளை ஏற்றி இறைவனை வழிபடுவார்கள்.

களிமண்ணால் செய்யப்பட்ட இந்த அகல் விளக்குகளில் பழையது இருந்தாலும், புதிதாக ஒரு சில விளக்குகள் ஆவது வாங்க வேண்டும் என்பது ஐதீகம். இதனால் அகல் விளக்குகள் அதிக அளவில் கார்த்திகை மாதத்தில் விற்பனையாகும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில்  செங்கம் மற்றும் மங்கலம் அருகே வேடந்தவாடி கிராமங்களில் மண்பாண்டம் தயாரிக்கும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள தொழிலாளர்கள் ஆண்டு முழுவதும் மண்ணால் ஆன பானை, சட்டி, அடுப்பு, அகல்விளக்கு, குதிரை, யானை, நாய் உள்ளிட்ட பொம்மைகளை தயாரித்து வருகின்றனர்.

இவர்கள் தை பொங்கல் மற்றும் கோடை காலங்களில் மன்பானை செய்வது, கார்த்திகை மாதத்தில் அகல்விளக்குகள் செய்வது, திருவிழா காலங்களில் பொம்மைகள் செய்வது என சீசனுக்கு ஏற்றார்போல், மண்ணால் ஆன பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில் மங்கலம் , செங்கம் பகுதியில் தற்போது அகல் விளக்குகள் தயாரிக்கும் பணியில் ஆண்கள் மற்றும் பெண்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்,

இங்கிருந்து வாங்கிச் செல்லும் அகல் விளக்குகளை திருவண்ணாமலை, செய்யாறு, வந்தவாசி, போளூர் , கிருஷ்ணகிரி மற்றும் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறும்போது, ‘மண்பாண்ட தொழிலுக்கு ஏரியில் இருந்து களிமண் எடுத்து கொள்ள அரசு அனுமதி அளித்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மாட்டு வண்டியில் மண் ஏற்றி வருகிறோம். இதற்கு, ரூ.500 வரை வாடகை கொடுக்கப்படுகிறது.

தற்போது கார்த்திகை மாத சீசன்.  மக்கள் மத்தியில் அகல் விளக்குகள் தேவைகள் அதிகம் இருந்தும் மழைக்காலம் என்பதால் காய வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மழை பெய்து ஓய்ந்தாலும் பனிமூட்டம் மேகமூட்டம் சூழலும் அகல்விளக்குகளை வெயில் காய வைக்க முடியாமல் தொழிலாளர்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் .தற்போது களிமண் ஒருமுக அகல் விளக்குகள், ஐந்து முக விளக்குகள் ,ஏழு முக விளக்குகள், ஒன்பது முக விளக்குகள் அளவுக்கு ஏற்ப 2 ரூபாய் முதல் 100 ரூபாய்க்கு வரை விற்பனை செய்யப்படுகின்றன.

இத்தொழிலில் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடையாது. சொற்ப வருவாயே கிடைக்கிறது. தொழிலை விட்டுவிடக் கூடாது என்பதற்காக செய்து வருகிறோம்.

இயந்திரம் மூலம் அச்சு விளக்கு, தயாரிக்கப்படுவதால், பாரம்பரியமாக செய்யப்படும் அகல் விளக்குகளின் விற்பனை பாதிக்கப்படுகிறது. கிராமங்களுக்கு நேரிடையாக சென்றும் விற்பனை செய்கிறோம். அகல் விளக்குகளுக்கு பலரும் பணம் கொடுத்து விடுவார்கள்.

ஒரு சிலர், பழமை மாறாமல் பண்டைய கால முறைப்படி, அவர்களிடம் உள்ள மணிலா உள்ளிட்ட தானியங்களையும் கொடுக்கும் வழக்கத்தை பின்பற்றுகின்றனர். இதையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். மழை காலங்களில் மண்பாண்ட தொழில் பாதிக்கப்படுவதால், இத்தொழிலையே நம்பி உள்ள குடும்பங்களுக்கு மாதாந்திர உதவித் தொகையை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்’ என்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top