திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் முகாம் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி தகுதி நாளாக புகைப்படம் கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
ஒரு வாக்காளர்கள் தங்கள் பெயரைச் சேர்ப்பதற்கு வாக்காளர் பட்டியலில் இருந்து அவர்களின் பெயரைத் திருத்துவதற்கு வசதியாக இந்திய தேர்தல் ஆணையத்தால் இன்று நவம்பர் 16 மற்றும் 17 தேதிகளில் மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில், வாக்குச்சாவடி அமைப்பில் சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டன.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைத்தல் போன்றவற்றுக்கான படிவங்கள் அந்தந்த வாக்குச்சாவடி அமைவிடங்களில் வழங்கப்படுகிறது.
பூர்த்தி செய்த படிவங்களை அங்கேயே சமர்ப்பிக்கலாம். குறிப்பாக புதிய வாக்காளர் சேர்க்கை படிவம் 6, வெளிநாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6ஏ, வாக்காளர் பட்டியல் அங்கீகாரத்திற்கான ஆதார் எண் உண்மை சான்று 6 பி, வாக்காளர்பட்டியில் பெயர் சேர்ப்பதை ஆட்சேபிக்கவும், ஏற்கனவே உள்ள பெயரை நீக்குவதற்கும் படிவம் 7-ஐ சமர்ப்பிக்க வேண்டும். அவ்வகையில் இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து வாக்கு சாவடி மையங்களையும் சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் காட்டாம்பூண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் முகாம் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் அனைவரும் இச் சிறப்பு முகாமினை பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் மற்றும் திருத்தம் செய்தல் போன்றவற்றை மேற்கொள்ளலாம் என கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் ராம் பிரதீபன், திருவண்ணாமலை வட்டாட்சியர், அரசு துறை சார்ந்த அலுவலர்கள், தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் உடன் இருந்தனர்.