திருவண்ணாமலை அருணை தமிழ் சங்கத்தின் சார்பாக இந்த ஆண்டு முதல் தமிழறிஞர் கலைஞர் விருது வழங்கப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சரும் அருணை தமிழ் சங்கத்தின் தலைவருமான எ.வ.வேலு அறிவித்துள்ளார்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சரும் அருணை தமிழ் சங்கத்தின் தலைவருமான எ.வ.வேலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
அருணை தமிழ்ச் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் இம் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் தொண்டாற்றியவர்களுக்கு மறைமலை அடிகளார் விருதும் ,பொது தொண்டு புரிபவர்களுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி விருதும், கலைச் சேவை செய்து வருபவர்களுக்கு கலைவாணர் என் எஸ் கே விருதும், ஆன்மீக சேவை செய்து வருபவர்களுக்கு கிருபானந்த வாரியார் விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த வருடம் முதல் சாதி பாகுபாடின்மை, பெண் கல்வி பகுத்தறிவு போன்ற சமூக நீதிக்காக பாடுபடும் சமூகநீதி காவலர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் விருது வழங்கப்பட உள்ளது.
பண முடிப்பு ரூபாய் 25 ஆயிரத்தில் இருந்து ரூபாய் 50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. விருது பெறுபவர்களுக்கு ரூபாய் 50,000, விருதுகளும் வழங்கி சிறப்பிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மேற்கண்ட விருதுகளுக்கு தகுதியுடையவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த விருது பெற விண்ணப்பிப்பவர்கள் புகைப்படம் தகுந்த விவரங்கள் மற்றும் ஆதாரங்களோடு அடுத்த மாதம் டிசம்பர் 20ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விண்ணப்பங்கள் தலைவர் அருணை தமிழ்ச் சங்கம், திருக்கோவிலூர் சாலை, சாரோன், திருவண்ணாமலை என்ற முகவரிக்கு அனுப்பி வைத்திட வேண்டும்.
விருதுக்கு விண்ணப்பிப்பவர்கள் திருவண்ணாமலை வருவாய் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அமைச்சரும் அருணை தமிழ் சங்கத்தின் தலைவருமான எ.வ.வேலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.