Close
நவம்பர் 25, 2024 6:49 காலை

கிரிவலப் பாதை அஷ்ட லிங்க கோயில் அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பக்தர்கள் கோரிக்கை

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கத்தை வழிபடுவதில் உள்ள இடையூறுகளையும் ஆக்கிரமிப்புகளையும் கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் அகற்ற முன் வரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சைவத்தின் தலைநகரான திருவண்ணாமலை நகருக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கணக்கிட முடியாத அளவிற்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அருணாச்சலேஸ்வரரை வழிபடவும் கிரிவலம் வரவும் நாள்தோறும் பல ஆயிரம் கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

அவ்வாறு வரும் பக்தர்கள் கிரிவலப் பாதையில் உள்ள அண்ணாமலையார் கோவில் கட்டுப்பாட்டில் உள்ள அஷ்ட லிங்கங்கள் திருநேர் அண்ணாமலையார், ஆதி அருணாச்சலேஸ்வரர் கோயில், இந்திரலிங்கம், குபேர லிங்கம், அக்னி லிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்கங்களை வழிபாடு செய்வது வழக்கம்.

திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் அனைவருமே அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வதில்லை.

காரணம் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதால் பெரும்பாலான பக்தர்கள் மலையே சிவனாக உள்ள அண்ணாமலையை லளம் வந்து கிரிவலப் பாதையில் உள்ள சிவலிங்கங்களை வழிபட்டு அடி அண்ணாமலையில் உள்ள ஆதி அருணாச்சலேஸ்வரரை வழிபட்டு செல்கின்றனர்.

இந்நிலையில் அருணாச்சலேஸ்வரர் கோயில் கட்டுப்பாட்டில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் அருகாமையில் பூஜை பொருட்கள் விற்பனை செய்வதற்கு டெண்டர் முறையில் கோவில் நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் விற்பனை செய்ய ஒதுக்கப்பட்ட இடத்தில் கடைகளை அமைக்காமல் கோயில் முன்பாக பக்தர்கள் தரிசனம் செல்லும் பாதையை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் ஆட்டோக்களில் கிரிவலம் வரும் பக்தர்கள் அஷ்டலிங்கங்களில் வழிபடுவதற்காக ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது ஆட்டோக்களை அஷ்ட லிங்கங்களுக்கு முன்பாகவே நிறுத்திவிட்டு நகர்த்துவதே இல்லை.

இதனால் நடந்து வரும் பக்தர்கள் எளிதாக சென்று தரிசனம் செய்ய முடிவதில்லை.

மேலும் ஒரு சில அஷ்டலிங்க கோயில்களில் பூஜை பொருட்கள் விற்பனை செய்ய டெண்டர் எடுத்தவர்களே காவி உடையில் ஒரு சில சாமியார்களை அமர வைத்து பக்தர்களுக்கு ஆசிர்வாதம் செய்து, இந்தக் கடையில் ருத்ராட்ச மாலை வாங்குங்கள், ஸ்படிகலிங்கம் வாங்கி பூஜை செய்யுங்கள் எனக் கூறி பணம் பெறும் செயல்களிலும் ஈடுபட்டு வருவதாகவும் பக்தர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இதனால் பக்தர்கள் ஏமாற்றப்படுவதுடன் மன அமைதியுடன் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கோவில் நிர்வாகமும் காவல்துறையும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்கம் முன்பு நிறுத்தப்பட்டுள்ள ஆட்டோக்களை அகற்ற வேண்டும் பூஜை பொருட்கள் விற்கும் கடையினை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தான் செயல்பட அனுமதிக்க வேண்டும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top