சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் இறந்தவரின் உடலை பாலத்தின் வழியாக ஏற்றி எடுத்துச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மதுரை:
மதுரை யா.ஒத்தக்கடை கிழக்கு சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட, மாங்குளம் மேட்டுக்காலனி கிராமத்தில் சுடுகாட்டுக்கு பாதை இல்லாததால் இறந்தவரின் உடலை பாலம் வழியாக எடுத்துச்செல்லும் அவலம் ஆறு மாதத்திற்கும் மேலாக இருந்து வருகிறது. இதுகுறித்து பாதை கேட்டு மனு கொடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது.
மதுரை கிழக்கு மாவட்டம் மீனாட்சிபுரம் ஊராட்சி மேட்டுக்காலனி ஆதி திராவிடர் மக்கள் குடியிருக்கும் பகுதி ஆகும். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கான சுடுகாடு கிராமத்தின் வடக்கு பகுதியில் உள்ளது.
இந்த கிராமத்தில் யாராவது இறந்து போனால், உடலை அந்த கிராமத்தில் உள்ள மேட்டுக்காலனி ஓடையின் வழியாக சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வது வழக்கம். கடந்த சில மாதங்களாக அரசு சார்பில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் பாலம் கட்டப்பட்டது.
பாலம் காட்டும் பணி பாதியிலேயே நிற்கும் காரணத்தால் உடலை பாலத்தின் மீது ஏற்றி எடுத்துச் செல்லும் அவலம் உள்ளது. இதனால், பாலத்தின் மீது உடலை எடுச்செல்லும் போது தவறி விழுந்து எடுத்து செல்லும் அவலமான நிலையும் ஏற்படுகிறது.
இதனால் இறந்து போனவரின் உடலை சுடுகாட்டுக்கு பாலம் மீது ஏறி எடுத்துச் சென்று வருகிறார்கள். சுடுகாடு செல்லும் பாதையை சீரமைத்து தரும்படி கிராம மக்கள் சார்பில் அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும், இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் சுப்பாய் என்பவரின் மனைவி சின்னவீரி (வயது 62) என்ற தொழிலாளி உடல் நலக்குறைவால் இன்று (நவ.24) இறந்து விட்டார். சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல பாதை இல்லாததால் இவரது உடலை அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் தோளில் சுமந்தபடி பாலத்தின் மீது ஏறி எடுத்துச் சென்றனர்.
மக்கள் குறையை மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா..?