Close
நவம்பர் 25, 2024 4:42 மணி

நாமக்கல் வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பெயரில் மோசடி: கலெக்டர் எச்சரிக்கை

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் பெயரில் போன் செய்து, பண மோசடியில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து, கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தின் சார்பில், வேலைவாய்ப்பு பதிவு, புதுப்பித்தல், பதிவு மாற்றம், பரிந்துரைத்தல், தன்னார்வ பயிலும் வட்டத்தால் வழங்கப்படும் இலவச பயிற்சி வகுப்பு, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்குதல் போன்ற பணிகள் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தொலைபேசி மூலம், நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக பெயரை பயன்படுத்தி கல்வி உதவித்தொகை வழங்குவதாகவும், அதற்கு முன்பணம் செலுத்தக்கோரி பண மோசடியில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள் என, புகார்கள் பெறப்பட்டு வருகின்றன. இவ்வாறான குற்றச் செயலில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், பொய்யான தகவலை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். அவ்வாறான அழைப்புகள் ஏதும் வந்தால், 04286 222260 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விபரத்தை தெரிவிக்கலாம்.

வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பயன்பெற நாமக்கல் நகரில் மோகனூர் ரோட்டில் செயல்பட்டு வரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top