Close
நவம்பர் 26, 2024 6:42 காலை

சாலையில் வாகனங்களை நிறுத்துவோர் மீது கடும் நடவடிக்கை : ஐஜி எச்சரிக்கை..!

ஐஜி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலையில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் வாகனங்களை நிறுத்தும் உரிமையாளர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நினைத்தாலே முக்தி தரும் தலமான திருவண்ணாமலை வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி டிசம்பர் 13ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் தொடர்ந்து அன்று மாலை தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

தீபத் திருவிழாவிற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் காவல்துறையின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வடக்கு மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் தீபத் திருவிழா பாதுகாப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வடக்கு மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க் கூறுகையில்

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கடந்தாண்டை போல இந்தமுறையும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு எந்த இடர்பாடுகளும் இல்லாமல் காவல்துறை அவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்தாண்டு பக்தர்கள் அதிகளவு வருவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

13 ஆம் தேதி தீபம் நிகழ்வு நடக்கிறது. 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் பௌர்ணமி உள்ளது. அதனால் இந்தமுறை கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மக்கள் கூட்டம் நெரிசலை குறைப்பதற்காக போக்குவரத்து கழகத்துடன் இணைந்து 9 சாலைகளிலும் 25 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கடந்தமுறை 10 தற்காலிக பேருந்து நிலையங்களை ஏற்பாடு செய்திருந்தோம். இந்தமுறை அதன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் தங்களது கார்களை பாதுகாப்பாக பார்க்கிங் செய்ய 75 முதல் 120 கார் பார்க்கின் இடங்களை தேர்வு செய்யப்பட்டுள்ளது பக்தர்களின் வசதிக்காக விரைவில் கார் பார்க்கிங் முகவரி மற்றும் கூகுள் லொகேஷன் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்படும்.

உரிமையாளர்கள் மீது நடவடிக்கை

சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பார்க்கிங் செய்யும் உரிமையாளர்கள் மீது மற்றும் ஓட்டுநர்கள் மீதும் கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை பாயும் .

திருவண்ணாமலை மாநகரம் மாடவீதி கிரிவலப் பாதை உள்ளிட்ட இடங்களில் பக்தர்களை பாதுகாக்கும் வகையில் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பறக்கும் படை வீதம் 14 கிலோ மீட்டருக்கு 14 பறக்கும் படைகளும் மாட வீதிகளில் நான்கு பறக்கும் படைகளும் என மொத்தம் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு ஒரு காவல்துறை ஆய்வாளர் தலைமையில் 5 காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர் புகார் எனும் பெறப்பட்டால் சம்பவ இடத்திற்கு பறக்கும் படையினர் விரைந்து சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

மேலும் கிரிவலப் பாதை மற்றும் மாட வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
கிரிவலம் வரும் பக்தர்களை அச்சுறுத்தும் வகையில் எவரேனும் நடந்து கொண்டால் அவர்கள் மீது கடுமையான தண்டனை பாயும் என்றும் எச்சரித்தார்.

கூட்டத்தில் காவல்துறை துணை ஐஜி தேவராணி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் சுதாகர், கிரண் ஸ்ருதி ஸ்ரேயா குப்தா, உதவி காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top