Close
நவம்பர் 26, 2024 9:33 காலை

ரிக் வண்டிக்கு ஜாமீன் போட்டவரிடம் அசல் ஆவணங்களை வழங்கிய பேங்க் : ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு..!

கோப்பு படம்

நாமக்கல்:

ரிக் வண்டிக்கு ஜாமீன் கையெழுத்து போட்டவரிடம், அசல் ஆவணங்களை வழங்கிய பேங்க், வாடிக்கையாளருக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

திருச்செங்கோடு அருகே உள்ள அணிமூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழரசன் (34). இவர் கடந்த 2021ம் ஆண்டு ரிக் யூனிட் லாரியையும் அதன் சப்போர்ட் லாரியையும் வாங்குவதற்கு, திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பேங்கில் ரூ. 52 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

கடனுக்காக அவரது தாயார் பெருமாயி பெயரில் உள்ள நிலத்தின் அசல் ஆவணத்தையும் வங்கிக்கு அடமானமாக கொடுத்துள்ளார். 2022 டிசம்பர் மாதத்தில் பெற்ற கடன் தொகை மற்றும் அதற்கான வட்டியை முழுமையாக வங்கியில் செலுத்தி கடனை முடித்துவிட்டார்.

பிறகு, வங்கியில் சமர்ப்பித்த தாயாரின் பெயரில் உள்ள நிலத்தின் அசல் ஆவணம், கடன் நிலுவையில் இல்லை என்ற சான்றிதழ் மற்றும் ஆர்டிஓ ஆபீசில் எச்பியை நீக்குவதற்கான தடையின்மை சான்று ஆகியவற்றை தமிழரசன் பேங்கில் கேட்டுள்ளார்.பேங்க் அவற்றை தராமல் இழுத்தடித்தது.

தனக்குத் தெரியாமல் மோசடியாக ரிக் வாகனங்களுக்கு பெயர் மாற்றம் நடந்து விடக்கூடாது என்பதற்காக ஆர்டிஓ அலுவலகத்தில் தமிழரசன் ஆட்சேபணை கடிதத்தை கொடுக்க சென்றபோது, ஏற்கனவே தமிழரசனின் 2 வாகனங்களும் கார்த்தி என்பவரின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கடந்த 2023 ஜூன் மாதம், பேங்கின் மீது, நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். திருச்செங்கோடு அருகே உள்ள குட்டி மேய்க்கன்பட்டி கிராமத்தில் வசிக்கும் கார்த்தி என்பவர் தமிழரசன் பேங்கில் பெற்ற கடனுக்கு, ஜாமீன் கையெழுத்து போட்டிருந்தார்.

அப்போது ஏற்பட்ட ஒப்பந்த பத்திரத்தில், தமிழரசன் வங்கியில் பெற்ற கடனை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், முழு கடனையும் செலுத்தவும் அசல் ஆவணங்களை பெற்றுக் கொள்ளவும் கார்த்திக்குக்கு தமிழரசன் சம்மதம் வழங்கியிருந்தார்.

இதனால் அவரிடம் தாங்கள் அசல் ஆவணங்களை வழங்கினோம் என்று பேங்கின் தரப்பில் கோர்ட்டில்வாதிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், நுகர்வோர் கோர்ட் நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் ரமோலா, லட்சுமணன் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர்.

அதில் ஜாமீன் கையொப்பம் செய்த கார்த்தி வங்கியில் சமர்ப்பித்த பதிவு செய்யப்படாத சம்மத பத்திரத்தின் உண்மை தன்மையை அறியாமல், கடன் பெற்ற தமிழரசனை நேரில் வரவழைத்து விசாரிக்காமல், அசல் ஆவணங்களை ஜாமீன் கையொப்பம் செய்தவரிடம் வழங்கியதால், அவர் ஆர்டிஓ ஆபீசில் வாகனங்களை தனது பெயருக்கு மாற்றம் செய்துள்ளார்.

இது பேங்கின் சேவை குறைபாடு என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கு தாக்கல் செய்தவரின் தாயார் பெருமாயி பெயரில் உள்ள சொத்தின் அசல் ஆவணத்தையும், சேவை குறைபாடு காரணமாக ஏற்பட்ட வாகனங்களின் உரிமை இழப்புக்கு நிவாரணமாக, ரூ. 25 லட்சமும், அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூபாய் 5 லட்சமும் சேர்த்து, தமிழரசனுக்கு பேங்க் 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்றும் நுகர்வோர் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top