நாமக்கல் கலெக்டர் ஆபீசில், இந்திய அரசியலமைப்பு தின விழாவை முன்னிட்டு, அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை வாசிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது ஆண்டினை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் தலைமைச் செயலகத்திலுள்ள அனைத்துத் துறைகளிலும், ஐகோர்ட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை தலைமை அலுவலகங்கள், அனைத்து சார்நிலை அரசு அலுவலகங்கள், மாநில அரசின் அனைத்து அலுவலகங்கள், தன்னாட்சி அதிகார அமைப்புகள், நிறுவனங்கள், தன்னாட்சி அரசு நிறுவனங்கள், அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை வாசிக்கவேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதையொட்டி, நாமக்கல் கலெக்டர் ஆபீசில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் உமா தலைமையில் அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையை அனைத்து துறை அலுவலர்களும் வாசித்தனர்.
நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத் திட்ட சப் கலெக்டர் பிரபாகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் முருகன், மாவட்ட சமூக நல அலுவலர் காயத்திரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் லீலாகுமார் உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.